ட்விட்டர் தளத்தில் ஒரு ட்வீட்டுக்குப் பதிலாகப் போடும் ட்வீட்டில் திருத்தம் செய்யும் வசதி திடீரென சில பயனர்களுக்குக் கிடைத்தது. ஆனால், இது தெரியாமல் நடந்த தவறு என்று ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் பகிரப்படும் ட்வீட்டுகளையோ அதற்கு வரும் ப்தில் ட்வீட்டுகளையோ பயனர்கள் திருத்த முடியாது (edit). ட்வீட்டில் தவறாக ஏதாவது எழுத்துப் பிழையோ, கருத்துப் பிழையோ, தகவல் பிழையோ இருந்தால் அதை மொத்தமாக நீக்கிவிட்டு புதிதாகத்தான் ட்வீட் செய்ய வேண்டும்.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு சில பயனர்களுக்கு மட்டும் அவர்கள் போடும் பதில் ட்வீட்டுகளைத் திருத்தும் வசதி கிடைத்தது. ஒருவரது ட்வீட்டுக்குப் பதில் போட்டு, அதை நீக்கும்போது, மீண்டும் பழைய வார்த்தைகள் தோன்றியதாகவும், அதில் இருக்கும் பிழைகளை நீக்கிவிட்டு, திருத்தப்பட்ட ட்வீட்டை மீண்டும் அப்படியே பதிவேற்ற முடிந்தது என்றும் பயனர்கள் தெரிவித்தனர்.
இன்னும் சிலரும், ஆஹா இது அருமையான வசதி, சோதனை செய்யப்படும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டால் மிக்க மகிழ்ச்சி என்கிற ரீதியில் ட்வீட் செய்திருந்தனர்.
ஆனால், பின்னர் இதுகுறித்து ட்வீட் செய்திருந்த ட்விட்டரின் செய்தித் தொடர்பாளர், “துரதிர்ஷ்டவசமாக இதை நாங்கள் சோதனையெல்லாம் செய்யவில்லை. இது தவறாக நடந்த ஒரு விஷயம். இதைச் சரிபார்த்து வருகிறோம்” என்று தெளிவுபடுத்தியிருந்தார்.
தவறுதலாகப் பகிரப்படும், பிழையோடு இருக்கும் ட்வீட்டுகளைத் திருத்தும் வசதியை நீண்ட காலமாகவே ட்விட்டர் பயனர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால், ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்ஸி, அதற்கான வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
“இதை நாங்கள் குறுஞ்செய்தி வசதியாகத்தான் ஆரம்பித்தோம். ஒருவருக்கு மொபைல் மூலம் நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டால், அது என்னவாக இருந்தாலும் அதைத் திரும்பப் பெற முடியாது இல்லையா? அதேபோலத்தான் இங்கும். ஆரம்பக் காலங்களில் இருந்த அப்படி ஒரு உணர்வைப் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என டார்ஸி கூறியிருந்தார்.