புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கும், சோனியா காந்தியின் வீட்டிற்கும் வாடகை செலுத்தவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
நாடுமுழுவதும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டிக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியும் சொந்த அலுவலகம் கட்டி 3 ஆண்டுகளில் அரசு கட்டடங்களை காலி செய்ய வேண்டும் என்று டெல்லி வீட்டுவசதி வாரியம் கேட்டுக் கொண்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே இது நடைமுறைக்கு வந்து விட்டது.
இதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2010-ம் ஆண்டு ரோஸ் அவென்யூவில் 9–ஏ என்ற முகவரியில் கட்சி அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து டெல்லி அக்பர் சாலையில் செயல்படும் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் மற்றும் அக்கட்சிக்கு சொந்தமான பங்களாக்களை 2013ல் காலி செய்திருக்க வேண்டும். ஆனால் அக்கட்சி இதுவரை காலி செய்யாமல் பலமுறை அவகாசம் கேட்டு பெற்று வருகிறது.
2020-ம் ஆண்டு ஜூலை மாதம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவின் லோதி சாலையில் உள்ள பங்களாவை வாடகை பாக்கிக்காக ஒரு மாத காலத்திற்குள் காலி செய்யுமாறு அரசு நோட்டீஸ் அனுப்பியது. முன்னதாக தான் வசிக்கும் அரசு வீட்டுக்கு வாடகையை குறைக்க வேண்டும் என்று பிரியங்கா கடிதம் எழுதியதும், இதனை பாஜகவினர் கடுமையாக விமர்சித்ததும் பேசும் பொருளானது.
இந்தநிலையில் சமூக ஆர்வலர் சுஜித் படேல் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்துக்கு கேள்வி அனுப்பி இருந்தார். அதற்கு அமைச்சகம் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு ரூ.12,69,902 வாடகை பாக்கி உள்ளது. கடைசியாக டிச.,2012 ம் ஆண்டு தான் வாடகை பாக்கி செலுத்தப்பட்டது.
அதேபோல், 10 ஜன்பத் சாலையில் சோனியா வசிக்கும் வீட்டிற்கு ரூ.4,610 வாடகை பாக்கி உள்ளது. கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாடகை செலுத்தப்பட்டது.
சாணக்யாபுரி சி–II109 என்ற முகவரியில் வசிக்கும் சோனியாவின் தனிச்செயலர் வீணா ஜார்ஜ் கடைசியாக 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாடகை செலுத்தி உள்ளார். அவர் அரசிற்கு ரூ.5,07,911 பாக்கி வைத்துள்ளார்.
இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டு உள்ளது.
இதனிடையே சோனியா காந்தியை பாஜகவின் தஜிந்தர் பால் சிங் பக்கா கடுமையாக கிண்டல் செய்துள்ளார்.
வாடகை கட்ட வசதியில்லாத சோனியா காந்தியின் வங்கி கணிக்கிற்கு ரூ.10 பணத்தை அனுப்பி வைக்குமாறு அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘‘பதவியில் இல்லாததால்ஊழல் செய்ய முடியாமல் வாடகை செலுத்த முடியாமல் இருப்பதாகவும், அரசியல் வேறுபாட்டை தாண்டி ஒரு சக மனிதனாக அவருக்கு உதவி செய்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.