இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச முதலீட்டாளர்களை மேற்கோள்காட்டி Financial Times வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2019ம் பாரிய வரிக் குறைப்பு செய்யப்பட்டதுடன், கோவிட் தொற்று காரணமாக சுற்றுலா துறை பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது.
வட்டி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக இந்த ஆண்டு சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டும். ஆனால் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 3 பில்லியனுக்கு குறைவான அமெரிக்க டொலர்களே இருக்கிறது.
இந்நிலையில், இலங்கை பெரும்பாலும் வங்குரோத்து நிலையை அடையும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அடுத்த பெரும் சவால் எதிர்வரும் ஜூன் மாதமாகும் போது ஒரு பில்லியன் டொலர் இறையாண்மை முறிகளை மீள செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அதனை செலுத்தத் தவறினால், கோவிட் பரவலையடுத்து கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சுரினாம், பெலிஸ், ஜாம்பியா மற்றும் ஈக்வடார் உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கையும் இணையும்.