புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இரண்டு நாட்களுக்கு முன்பு அரியாங்குப்பம் அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் இஸ்லாமிய மாணவியை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என கடுமையாக பேசியுள்ளார். எல்லா மதத்தினருக்கும் அவர்களது மதத்தினுடைய கோட்பாடு, கலாசாரத்தை கடைப்பிடிக்க உரிமை உண்டு. இதை பற்றி கேள்வி கேட்க எந்த அரசு அதிகாரிக்கும் உரிமை கிடையாது.
இது அதிகார துஷ்பிரயோக செயல். ஒரு மதத்தை சேர்ந்தவரை இழிவுபடுத்தும் வகையில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து புகார் அளித்தும் கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை நடத்த வேண்டும்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள நிலையை முதல்வர் ரங்கசாமி உருவாக்கக் கூடாது. வாதானூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கல்வித்துறை அமைச்சரின் தொகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் கலாசாரத்தை பள்ளிகள் மூலமாக புதுவையில் நுழைப்பதற்கான வேலையை பா.ஜ.க மறைமுகமாக செய்கிறது. அதற்கு துறை அமைச்சர் தூண்டுகோலாக இருக்கிறார். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக கல்வித்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள்.
இந்த விசாரணையில் எனக்கு நம்பிக்கையில்லை. முதல்வர் ரங்கசாமி மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருந்தால், கல்வியை முதல்வர் கையில் எடுத்துக் கொண்டு பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பிள்ளைகளின் மனதில் பதிய வைக்கும் வேலையை தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல ஹிஜாப் அணிவதை எதிர்க்கும் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3 சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் தங்களது தொகுதியில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்று பேரவை தலைவரையும், ஆளுநரையும் மாறி மாறி சந்திக்கின்றனர். இவர்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவு கொடுத்தவர்கள். இது பா.ஜ.க-வுக்கும் 3 சுயேச்சை எம்.எல்.ஏ-க்களுக்கும் உள்ள பிரச்னை. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டியது சம்பந்தமாக முதல்வரிடம்தான் முறையிட வேண்டும். எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல என்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட பிறகு பா.ஜ.க அலுவலகத்துக்கு செல்வதும் அக்கட்சியின் போராட்டங்களில் கலந்து கொள்வதும் பேரவை தலைவருக்கு அழகல்ல.
அவர் எந்த அரசியல் கட்சியையும் சேராதவர் என்று மக்கள் மத்தியில் வெளிப்படையாக சொல்ல வேண்டும். அவர் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களின் கருத்துகளை கேட்கலாம். ஆனால், சமாதான முயற்சியில் ஈடுபடுவது அழகல்ல. அரசியல் செய்வது பேரவை தலைவருக்கு வேலையல்ல. அவர் அரசியல் செய்ய வேண்டுமென்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்து பா.ஜ.க அரசியலை செய்யலாம். அதைவிட்டு விட்டு பா.ஜ.கவின் ஏஜெண்டாக செயல்படுவதை ஏற்க முடியாது” என்றார்.