மாஸ்கோ,
ரஷியாவில் நடைபெற்ற கலை கண்காட்சியில் பாதுகாப்பு காவலாளி ஒருவர் போரடித்தது என்று ஓவியம் ஒன்றின் மீது கிறுக்கியதால் சுமார் ரூ. 6 கோடி மதிப்புள்ள ஓவியம் சிதைக்கப்பட்டது.
மேற்கு ரஷியாவில் யெகாடெரின்பர்க் நகரத்தில் உள்ள யெல்ட்சின் மையத்தில் இந்த கலை கண்காட்சி நடைபெற்றது. 60 வயதுள்ள அந்த காவலாளி வேலைக்குச் சென்ற முதல் நாளே, டிரெட்டியாகோவ் கேலரியில் இருந்து கடனாகப் பெறப்பட்ட கலைஞர் லெபோர்ஸ்காயாவின் ‘மூன்று உருவங்கள்’ (Three Figures) என்ற ஓவியத்தின் மீது பால்பாயிண்ட் பேனாவால் கண்களை வரைந்துள்ளார். ஓவியத்தை காவலாளி சேதப்படுத்தியதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த காவலாளி யெல்ட்சின் மையத்தில் பணிபுரியும் பாதுகாப்புக் காவலாளி எனத் தெரியவந்துள்ளது, அந்த காவலாளியின் பெயரை நிறுவனம் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அந்த காவலாளி போரடித்ததால் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
தற்போது அந்த ஓவியம் மறுசீரமைப்புக்காக மாஸ்கோ கேலரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஓவியத்தின் மறுசீரமைப்பு செலவு சுமார் 2 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு பணிக்கான செலவை யெல்ட்சின் மையம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த ஓவியத்தின் மதிப்பு எவ்வளவு என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் ஆல்பா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சுமார் 6 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.