தெற்காசிய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் முதலிடத்திலிருந்த சாம்சங் நிறுவனம், இரண்டாவது காலாண்டு முடிவில் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஏப்ரல் – ஜூன் காலகட்டத்தில் 20.3 சதவீத சந்தை பங்குடன் ஓப்போ நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதே காலகட்டத்தில் சாம்சங் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 19.5 சதவீதம் என்கிற நிலையில் உள்ளது.
மேலும் இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் சீன ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்களே இடம்பிடித்துள்ளன. மூன்றாவது இடத்தில் விவோ, நான்கில் ஸியோமி மற்றும் ஐந்தாவது இடத்தில் ரியல்மீ ஆகிய நிறுவனங்கள் உள்ளன. 2019ல் நான்காவது காலாண்டில், சாம்சங், ஒப்போ நிறுவனத்திடம் முதலிடத்தைப் பறிகொடுத்தது.
ஆனால் இந்த வருடம் முதல் காலாண்டில் ஓப்போ நிறுவனத்தை விட 0.2 சதவீத சந்தைப் பங்கு அதிகம் பெற்று 18.9 சதவீதத்துடன் சாம்சங் முதலிடத்தில் இருந்தது. தற்போது மீண்டும் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கரோனா நெருக்கடிக் காலத்தில். சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்ஃபோன்களை விட விலை குறைவான பட்ஜெட் ஃபோன்களை வாங்க வாடிக்கையாளர்கள் விரும்பியதே இந்த சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஏனென்றால் 2020ல் இரண்டாவது காலாண்டுப் பருவத்தில் ஒட்டுமொத்தமாகவே, தெற்காசியாவில் ஸ்மார்ட்ஃபோன் விற்பனை 22 சதவீதம் குறைந்துள்ளது.