சென்னை: சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை வலியுறுத்தியுள் ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று அதிகாலை 1.20 மணி அளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இத்தகவல் அறிந்ததும், உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்துக்காக தூத்துக்குடி சென்றிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனே சென்னை திரும்பினார். காலை 10.30 மணிஅளவில் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
பின்னர், கட்சியின் மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அவர்ஆலோசனை நடத்தினார். புதுச்சேரிஉள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் அங்கு வந்து, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டு, அண்ணாமலை உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து, காவல் துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வந்ததும் முதலில் தண்ணீர் ஊற்றி தடயங்களை அழித்துவிட்டனர். தடயவியல் நிபுணர்கள்சோதனை நடத்தவில்லை. தடயங்கள் சேகரிக்கப்படவில்லை. இதுவரை முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யவில்லை. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாகவும், நீட் தேர்வு பிரச்சினைக்காக அவர் பெட்ரோல் குண்டுவீசியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவதாகவும் காவல் துறைசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது. இது நகைச்சுவையாக உள்ளது. ஒரு சம்பவம் பற்றி முழுமையாக விசாரிக்காமல் ஒரு முடிவுக்கு வருவதை எப்படி ஏற்க முடியும். இதேபோலதான் பள்ளி மாணவி தற்கொலை வழக்கிலும் செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் குண்டர் சட்டத்தில் இருந்து சமீபத்தில்தான் வெளியே வந்துள்ளார். அவருக்கு நீட் தேர்வு பற்றி என்னதெரியும். எனவே, அவரை தூண்டிவிட்டது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். குற்றவாளி சொல்லும் வாக்குமூலத்தையே உண்மையாக ஏற்றுக்கொண்டு போலீஸார் இதுதான் காரணம் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. கமலாலயத்தில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் தொடர்பாக அனைத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அந்த நபருடன் மேலும் எத்தனை பேர் வந்தனர் என்பது கவனிக்கப்பட வேண் டும்.
தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட இதே நாளில்,சென்னை திருவிக நகரில் தேர்தல்பணிமனையும், திருப்பூரில் பாஜகஅலுவலகமும் சேதப்படுத்தப்பட் டுள்ளன. நாகப்பட்டினத்தில் பாஜகவேட்பாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் நடந்தி ருக்கும் இந்த சம்பவங்கள் சந்தே கத்தை ஏற்படுத்துகின்றன.
தற்போது தமிழகத்தில் காவல் துறை மீது உளவுத் துறை ஆதிக்கம் செலுத்துகிறது. இது மோசமான சூழலை ஏற்படுத்திவிடும். இந்தவிஷயத்தில் முதல்வர் கவனம்செலுத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும்.
நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது ஒரே ஒரு கட்சிதான் ஜெயிக்க வேண்டும் என்ற கோணத்தில் செயல்படுவதுபோல தெரிகிறது. குற்றவாளியை கைது செய்ததை வரவேற்கிறோம். ஆனால்,அவர் கொடுத்ததாக கூறப்படும்வாக்குமூலம்தான் பொருந்தவில்லை. எனவே, தேசிய புலனாய்வுமுகமை (என்ஐஏ) மூலம் விசாரணைநடத்த வேண்டும். அந்த விசாரணையில்தான் முடிச்சுகள் அவிழ்க்கப் படும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எனக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்துள்ளனர். வீட்டுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஒரேஒரு காவலர் மட்டும்தான் என்னோடுஇருக்கிறார். கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள தெருவின் 2பக்கமும் போடப்பட்டிருந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. என் தொலைபேசி முழுமையாக ஒட்டுக் கேட்கப்பட்டு வருகிறது.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல், வன்முறையால் எதிர்கொள்ளப் பார்க்கின்றனர். நாங்கள் இதற்கு பயந்தவர்கள்அல்ல. தொடர்ந்து ஆதாரங்களுடன் அரசின் குறைகள் சுட்டிக்காட்டப்படும். ஏற்கெனவே, கடந்த 2006-ம்ஆண்டு திமுக ஆட்சியின் போதுதான் இதேபோல குண்டு வீசப்பட்டது. இப்போதும் திமுக ஆட்சியில்தான் பாஜகவுக்கு எதிரான இந்ததாக்குதல்கள் அரங்கேற்றப்படுகின்றன. இந்த சம்பவங்கள் தொடர்பாக தேசிய தலைமைக்கும் தெரிவித்துள்ளோம். கடந்த 8 மாதங்களில் தமிழகத்தில் மாறி வரும் இந்த சூழ்நிலைகளைப் பார்த்து தேசியதலைமையும் கவலை அடைந்துள் ளது.
இவ்வாறு அவர் கூறினார்.