புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே சொக்க நாதப்பட்டியைச் சேர்ந்தவர் முரளி(36). இவரின் சித்தியின் மகளான திவ்யா என்பவர், நவீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான், கடந்த 2017 ஜூலை மாதம் திவ்யா தனது கணவருடன் டூவிலரில் சொக்க நாதப்பட்டி அருகே டூவிலரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, முரளி, அவரின் தந்தை பெருமாள் ஆகியோர் தங்களது காரை டூவிலரில் மோதி காதல் திருமண தம்பதியைக் கொலை செய்ய முயன்றுள்ளனர். இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த ஆதனக்கோட்டை போலீஸார் முரளி, பெருமாள் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கானது புதுக்கோட்டைச் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே தான் இந்த வழக்கில் தொடர்புடைய பெருமாள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த வழக்கானது நீதிபதி அப்துல்காதர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முரளி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், முரளிக்கு 7ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து முரளி பாபநாசம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சிறப்பாகப் புலன் விசாரணை செய்த போலீஸாரை மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் பாராட்டினார்.