லக்னோ: உ.பி.யில் நேற்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 60.17 % வாக்குப்பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அங்குள்ள வாக்குச்சாவடி ஒன்றில், யோகி ஆதித்யநாத் போலவே உடை அணிந்து வாலிபர் ஒருவர் வாக்களித்த வந்த சம்பவம் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் நேற்று (பிபரவரி 10ந்தேதி) 11 மாவட்டங்கள் அடங்கிய 58 தொகுதிகளில் நடைபெற்றது. காலை 7 மணியளவில் வாக்கு பதிவு தொடங்கியது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடந்தது.
தேர்தல் பாதுகாப்பு மத்திய படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பதற்றமான பகுதிகளில் மத்திய படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். எந்தவித பிரச்சினையுமின்றி வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற தேர்தலில் 60.17 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், நொய்டாவின் செக்டார் 11ல் உள்ள வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்த நபரால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது. அந்த நபர், மாநில முதல்வர் யோகி போல் மொட்டை தலையுடன், காவி உடை உடையணிந்து, அவரைப்போலவே நடைஉடை பாவனையுடன் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வந்தார். இவரை பார்த்த பலர், முதல்வர் யோகிதான் வந்துவிட்டாரோ என ஒருகணம் திகைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த நபர் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்திச் சென்றார்.
Video Courtesy: ANI