புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 58,077 என்றளவில் உள்ளது. அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதமும் 3.89% என்றளவில் சரிந்துள்ளது.
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்றாளர் கண்டறியப்பட்டார். அதன் பின்னர் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த வகை கரோனா வைரஸ் தனது தாக்கத்தைப் படிப்படியாக அதிகரித்தது. இதனால், நாடு முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் அமலுக்கு வந்தன. அரசாங்கமும் நாட்டில் மூன்றாவது கரோனா அலை ஏற்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே அன்றாட கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. இதனால் எல்லா மாநிலங்களிலும் படிப்படியாக தளர்வுகள் அமலாகிவிட்டன. குஜராத்தில் 19 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 8 பெருநகரங்களில் இரவு நேர ஊரடங்கின் காலம் குறைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் கரோனா நிலவரத்தை ஆராய்ந்த பின்னர், முதல்வர் புபேந்திர பாட்டீல் இந்தத் தளர்வுகளை அறிவித்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகல் கார்டனை பொதுமக்கள் பார்வையிட நாளை முதல் அனுமதியளிக்கப்படுகிறது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 58,077 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அன்றாட பரவல் (பாசிடிவிட்டி) விகிதம் 3.89% என்றளவில் உள்ளது. வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 5.76%
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 58,077 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
* இதுவரை கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 4.25,36,137 .
* கடந்த 24 மணி நேரத்தில் 1,50,407 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,13,31,158.
* கடந்த 24 மணி நேரத்தில் 657 பேர் உயிரிழந்தனர்.
* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,07,177.
* இதுவரை நாடு முழுவதும் 1,71,79,51,432 கோடி (171.79 கோடி ) பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.