சென்னை:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன.
நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் ஆன்லைன் மூலம் மட்டுமே பயின்று வந்த மாணவ- மாணவிகளை மீண்டும் உற்சாகமாக கல்வி பயில பள்ளி கல்வி துறை முயற்சி மேற் கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக 6,7,8 -ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரின் கற்றல் திறனை வளர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பள்ளி கல்வி துறை சார்பில் வருகிற 26-ந் தேதி புத்தகமில்லா தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்று மாநிலம் முழுவதும் 6,7,8-ம் வகுப்பு படிக்கும் ஒரு லட்சத்து 26 ஆயிரம் மாணவ-மாணவிகள் அனைவரும் வகுப்புகளுக்கு புத்தகமில்லாமல் வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
புத்தகமில்லா தினத்தன்று மாணவ-மாணவிகளின் தனித்திறமைகளை கண்டறியும் போட்டிகள் நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தவும், பாரம்பரிய கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் விளையாட்டுகளை நடத்தவும் கல்வி துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து உள்ளனர்.
இது தவிர சாதனை படைத்த பெண்கள், சிறுவர், சிறுமிகள் குறித்த தகவல்களை திரட்டி அதனை மாணவ, மாணவிகளுக்கு குறும்படமாக காட்ட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசு ஒரு கோடியே 26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் இடை நிலை கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் திறமையை வளர்க்க முடியும் என்றும் பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.
போட்டிகளையும், புத்தகமில்லா தினத்தையும் கொண்டாட ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
இதையும் படியுங்கள்… பள்ளிக்கூடத்திற்குள் சீருடை அணிந்துதான் செல்ல வேண்டும்- குஷ்பு