பார்த்துக் கொண்டே இருங்கள். எதிர்காலத்தில் காவிக்கொடிதான் இந்தியாவின் தேசியக் கொடியாக இருக்கும் என்று கர்நாடக மூத்த
பாஜக
தலைவரும், அமைச்சருமான கே.எஸ். ஈஸ்வரப்பா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது சுப்ரீம் கோர்ட் வரை இந்த விவகாரம் போயுள்ளது. இந்த நிலையில், தற்போது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல பேசியுள்ளார் கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், அமைச்சருமான கே.எஸ். ஈஸ்வரப்பா.
ஷிமோகாவில் உள்ள அரசுக் கல்லூரி ஒன்றில் இந்துத்வா மாணவர்கள் பெரும் கும்பலாக திரண்டு தேசியக் கொடிக் கம்பத்தில் ஏறி காவிக் கொடியை ஏற்றினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேச விரோத செயலை பலரும் கண்டித்திருந்தனர். அடுத்த நாள் காங்கிரஸ் மாணவர்கள் திரண்டு வந்து காவிக் கொடியை அகற்றி விட்டு தேசியக் கொடியை ஏற்றினர்.
இந்த விவகாரம் குறித்து ஈஸ்வரப்பாவிடம் கேட்கப்பட்டபோது அவர் பதிலளிக்கையில், இந்தியாவில் எதிர்காலத்தில் தேசிக் கொடியாக
காவிக் கொடி
மாறியிருக்கும். பார்த்துக் கொண்டே இருங்கள். இன்று, இந்த நாட்டில், இந்துத்வா குறித்தும், இந்துத்வா கொள்கை குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறோம், விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒரு கட்டத்தில் எங்களைப் பார்த்து அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடியுமா என்று பலர் சிரித்தனர். ஆனால் இன்று என்ன நடந்தது.. கோவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறதா? அதே போலத்தான், இன்னும் 100 அல்லது 200 ஆண்டுகளில் அல்லது 500 ஆண்டுகளில் தேசியக் கொடியாக காவிக் கொடி பறந்து கொண்டிருக்கும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சநதிர மூர்த்தியின் வாகனத்திலும், மாருதியின் வாகனத்திலும் காவிக் கொடிதானே பறந்தது. அப்போது மூவண்ணக் கொடியா இருந்தது. இப்போது மூவண்ணக் கொடியை நமது தேசியக் கொடியாக வைத்திருக்கிறோம். அதற்குரிய மரியாதையை நாம் இப்போது கொடுத்துதான் ஆக வேண்டும்.
கலபர்கி வடக்கு எம்எல்ஏ கனீஸ் பாத்திமா, சட்டசபைக்குள் ஹிஜாப் அணிந்து வருவேன் என்று கூறியுள்ளார். நான் அவரிடம் கேட்கிறேன், உங்களை மசூதிக்குள் முதலில் அனுமதிப்பார்களா.. பெண்களை அனுமதிப்பார்களா.. இதற்கு அவர் முதலில் பதில் சொல்லட்டும் என்றார் ஈஸ்வரப்பா.