சென்னை: தைராய்டு ஹார்மோன் பிரச்சினை இருப்போர் அடிக்கடி தங்களின் கண்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என டாட்கர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் அஸ்வின் அகர்வால் இது குறித்து கூறுகையில், “பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்களின் கண்களை அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். அதேபோல், தைராய்டு பிரச்சினை உள்ளோரும் தங்களின் கண்களை பரிசோதனை செய்ய வேண்டும். தைராய்டு பாதித்தவர்கள் இதை அசட்டை செய்தால் தீவிர கண் பார்வை பாதிப்புக்கு உள்ளாகலாம். இதற்கு TED எனப் பெயர்” என்றார்.
மருத்துவமனையில் ஆக்குலோப்ளாஸ்டி சிகிச்சை நிபுணர் ப்ரீத்தி உதய் கூறுகையில், “டெட் என்பது ஒருவகை ஆட்டோ இம்யூன் நோய். இதனால், கண்கள் புடைத்துக் கொண்டு காணப்படலாம். மற்றவர்கள் பார்வைக்கு நம் கண்கள் முற்றிலுமாக வெளியே வந்து நிற்பது போல் தோன்றலாம். இதை கவனிக்காமல்விட்டால் கண்பார்வை வெகுவாக பாதிக்கும் சூழலும் ஏற்படலாம்.
கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு தைராய்டு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பும் உருவாகிறது. அவ்வாறு தைராய்டு பாதிக்கப்பட்டோர் அதனை பரிசோதனை செய்து கொள்ளாவிட்டால் டெட் நோய் ஏற்படுகிறது. பெருந்தொற்றுக்குப் பின்னர் இத்தகைய பாதிப்புடன் நிறைய் பேர் சிகிச்சைக்கு வருகின்றனர்” என்றார்.
மருத்துவ சேவைகள் பிரிவு தலைவர் எஸ்.சவுந்தரி கூறுகையில், “இதுபோன்ற நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள ஒரே வழி, தைராய்டு சுரப்பி அளவி அவ்வப்போது பரிசோதனை கொள்வதே” என்றார்.