டிக் டாக் செயலியை வாங்கும் திட்டம் கூகுளுக்கு இல்லை என அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
டிக்டாக் செயலியை அமெரிக்காவில் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 10 கோடி. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதித்து உத்தரவிட்டது.
பின்னர் அடுத்த 90 நாட்களில் டிக்டாக்கின் அமெரிக்க பிரிவை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றுவிட வேண்டும், அப்படி விற்கப்பட்டால் தொடர்ந்து இயங்கலாம் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து பைட் டான்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
ட்ரம்பின் நிர்வாகம் இந்த உத்தரவைப் பிறப்பிப்பதில் முறையாக செயல்படவில்லை என்றும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக டிக்டாக் செயலி இருக்கிறது என்கிற குற்றச்சாட்டுக்கு எந்த வித ஆதாரமும் கொடுக்கவில்லை என்றும் பைட் டான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் டிக்டாக்கின் அமெரிக்க பிரிவை வாங்க ட்விட்டர், மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள் உள்ளிட்ட நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வந்தன.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சையிடம் டிக்டாக் செயலியை வாங்கும் திட்டமுள்ளதா என்று கேட்ட போது இல்லை என்று பதிலளித்துள்ளார். அதே நேரம் கூகுள் க்ளவுட் சேவைகளைப் பயன்படுத்த டிக்டாக்கின் உரிமையாளரான பைட் டான்ஸ் நிறுவனம் கட்டணம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களைப் போல இந்த தொற்று காலத்தில் டிக்டாக்கும் வளர்ந்து வருகிறது. இந்த சூழலில் பல நிறுவனங்கள் வலிமையாக வளர்ந்து வருகின்றன. பெரிய நிறுவனங்களும் நன்றாகச் செயல்படுகின்றன. ஆனால் பல சிறு நிறுவனங்களின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன்.
இன்றைய நாளில் பல விஷயங்கள் நம்மை நோக்கி வருகின்றன. புதிதாக எதாவது கண்டுபிடிக்க வேண்டுமென்று, புதிய தொழில்நுட்பத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று, அடுத்த தலைமுறை குறித்தெல்லாம் நாம் கவலைப் படுகிறோம். எந்தத் தகவலைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற சலுகை நமக்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.