வாஷிங்டன்: உக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் பீரங்கி பயிற்சிகள், படைகள் குவிப்பு காரணமாக எந்நேரமும் ஊடுருவல் நிகழலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் அமெரிக்கர்களை விரைந்து வெளியேறும்படி அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா – அமெரிக்கா இடையே பனிப்போருக்கு பின்னர் தற்போது உச்சக்கட்ட பதட்டம் நிலவுகிறது. உக்ரைன் எல்லைக்கு அருகில் சுமார் 1.3 லட்சம் ரஷ்ய வீரர்கள் படைப் பிரிவுகளாக உள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கிறது. மேலும் ரஷ்யாவின் கூட்டு நாடான பெலாரசிற்கு சமீபத்தில் பீரங்கிகளை அனுப்பி போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. நேட்டோ இதனை சுட்டிக்காட்டி மிகப்பெரும் ஆபத்து நிகழ இருப்பதாக எச்சரித்துள்ளது. போரைத் தவிர்க்க மேற்கத்திய நாடுகள் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருப்பதாவது: உக்ரைனில் மீதமிருக்கும் அமெரிக்கர்கள் இப்போதே வெளியேற வேண்டும். உக்ரைன் – ரஷ்யா விவகாரம் பயங்கரவாத இயக்கங்களை கையாள்வது போன்றது கிடையாது. உலகின் மிகப்பெரிய ராணுவத்தினை கையாள்வது ஆகும். இது மிகவும் வித்தியாசமான சூழ்நிலை. பிரச்னை விரைவில் மோசமடையக் கூடும். ரஷ்யப் படையெடுப்பு ஏற்பட்டால் அமெரிக்கர்களைக் காப்பாற்ற எந்தச் சூழ்நிலையிலும் அமெரிக்கத் துருப்புக்களை உக்ரைனுக்கு அனுப்பமாட்டேன். அப்படி அனுப்பி அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் ஒருவரையொருவர் சுடத் தொடங்குவது உலகப் போராகும். இவ்வாறு பைடன் எச்சரித்துள்ளார்.
Advertisement