‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக்குவது தமிழ் சினிமாவில் பலரின் கனவாக இருந்தது. அதனை கையிலெடுத்து படப்பிடிப்பை முடித்து இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார், இயக்குநர் மணிரத்னம்.கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன் என ஒரு பட்டாளமே இருக்கிறது. தாய்லாந்து, ஹைதராபாத், பாண்டிச்சேரி, சென்னை என பல இடங்களில் ஷூட்டிங்கை முடித்த படக்குழு, தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது.
படத்தில் தனக்கான டப்பிங்கை ஒவ்வொருவராக முடித்துக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கிராஃபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் கோடை வெளியீடு என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ஏற்கெனவே, ஏப்ரல், மே மாதங்களில் அத்தனை படங்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றன. அதில் ‘பீஸ்ட்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களும் அடங்கும். ‘பொன்னியின் செல்வன்’ படத்தை பேன் இந்தியா படமாக மட்டுமல்லாமல் உலகம் முழுக்க வெளியிட வேண்டும் என்பது படக்குழுவின் எண்ணம்.
ரூ. 500 கோடி செலவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. பல வெளிநாடுகளில் இருக்கும் முக்கியமான நிறுவனங்களில் இதன் கிராஃபிக்ஸ் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது முடியவே ஏப்ரல், மே மாதங்களாகிவிடும். அதன் பிறகு, படத்தை இந்தியா முழுக்க தீவிரமாக ப்ரமோட் செய்ய உள்ளார்களாம். அதற்கு கொஞ்சம் நாள்கள் தேவை. இதற்கிடையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களாக அறிமுகம் செய்வது, டீஸர், பாடல்கள் என ஒவ்வொன்றாக வெளியிட இருக்கிறார்கள். இந்தப் பணிகள் மற்றும் ப்ரமோஷன் எல்லாம் முடிந்து படத்தை ஆகஸ்ட், செப்டம்பரில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.