பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், பிரதமர் நரேந்திர மோடியும் குழந்தை பெற்றுக் கொண்டு குடும்ப அரசியலை நடத்த கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்று முன்னாள் பீகார் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதாதள தலைவருமான
லாலு பிரசாத் யாதவ்
கூறியுள்ளார்.
குடும்ப அரசியல்
குறித்து பிரதமர்
நரேந்திர மோடி
தனது உ.பி. தேர்தல் பிரசாரத்தின்போது சாடியிருந்தார். இந்தியாவில் குடும்பத்தோடு அரசியலில் இருக்கும் தலைவர்களில் லாலுவும் ஒருவர். இவர் முதல்வராக இருந்தார். பின்னர் இவரது மனைவி ராப்ரி தேவி முதல்வரானார். இவரது மகள் மிசா அரசியலுக்கு வந்தார். மகன் தேஜஸ்வியும் இப்போது அரசியலில் இருக்கிறார்.
குடும்ப அரசியல் குறித்த கேள்விக்கு லாலு தனது பாணியில் குசும்புத்தனமாக பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி குழந்தை பெற்றுக் கொள்ளட்டும். நிதீஷ் குமாரும் குழந்தை பெற்றுக் கொள்ளட்டும். அவர்களும் குடும்ப அரசியலுக்கு வரட்டும். யார் தடுத்தார்கள்?.
அவர்களுக்கு குழந்தை இல்லாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்?. நிதீஷ் குமாருக்கு மகன் இருக்கிறார், ஆனால் அரசியலுக்கு அவர் லாயக்கில்லை. நான் என்ன செய்ய முடியும்?. கடவுளிடம் வேண்டத்தான் முடியும் என்றார் லாலு பிரசாத் யாதவ்.
புதன்கிழமை நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் பேசுகையில், நான் சமூகத்திற்காக இருக்கிறேன். ஆனால் குடும்ப அரசியலில் சிலர் ஈடுபடுகின்றனர். லோஹியா குடும்பத்தினரை எங்காவது பார்த்துள்ளீர்களா?. அவர் சோசலிசவாதி. ஜார்ஜ் பெர்னாண்டஸ் குடும்பத்தை எங்காவது பார்த்துள்ளீர்களா?.. அவர் ஒரு சமாஜ்வாடி.
நிதீஷ் குமார்
குடும்பத்தை எங்காவது பார்த்துள்ளீர்களா?.. அவர் சோசலிசவாதி.
ஒரு கட்சியை ஒரே குடும்பத்தினர் பல தலைமுறைகளாக நடத்தி வந்தால் அங்கு சர்வாதிகாரம் மட்டுமே இருக்கும். ஜம்மு காஷ்மீரில் ஆரம்பித்து ஹரியானா, ஜார்க்கண்ட், உ.பி, தமிழ்நாடு என்று பல மாநிலங்களிலும் குடும்ப அரசியல்தான் இருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் மிகப் பெரிய எதிரி என்று கூறியிருந்தார் பிரதமர் மோடி.