மதுரை: “பொதுமக்கள் காலில் விழுந்து விழுந்து கால் வலிக்கிறதா?” என்று வேட்பாளர்களை பார்த்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு நையாண்டி செய்ததால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
மதுரை கே.புதூர் மாநகராட்சியில், 100 வேட்பாளர்களை ஆதரித்து எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி பிரச்சாரம் செய்தார். இந்த பொதுக் கூட்டத்திற்கு கே.பழனிசாமி வந்தபோது முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, கூட்டத்தினரைப் பார்த்து எழுந்து கரோஷம் போடும்படி கூறினார். அப்போது வேட்பாளர் பலர், அவர் நம்மைப் பார்த்து சொல்லவில்லையென்று மேடையில் அமர்ந்திருந்தனர். இதைப் பார்த்த செல்லூர் கே.ராஜு, ‘‘என்ன பொதுமக்கள் காலில் விழுந்து விழுந்து கால் வலிக்கிறதா?’’ என்று வேட்பாளர்களைப் பார்த்து நையாண்டி செய்தததால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. உடனே அவர்கள் அனைவரும் எழுந்து நின்றனர்.
அதன்பின் பேசிய செல்லூர் கே.ராஜு, ‘‘எம்ஜிஆர் மதுரையில் விரும்பி நின்றார். கிராமமாக இருந்த மதுரையை மாநகரமாக மாற்றியது அதிமுக. அதற்கு பிள்ளையார் சுழி போட்டது எம்ஜிஆர். வைகை கூட்டுக்குடிநீர் திட்டம்-2 நிறைவேற்றினார். அவரது வழியில் வந்த ஜெயலலிதா அதிமுகவை மிகப்பெரிய இயக்கமாக மாற்றினார். மக்கள்தான் எனக்கு பிள்ளைகள், எனக்கு யாரும் இல்லை என்று மக்களுக்காக இறுதி மூச்சு வரை சேவை செய்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கம் அவ்வளவுதான் என்றார்கள். ஆனால், கே.பழனிச்சாமி இந்த இயக்கத்தை பட்டுப்போகாமல் புத்துணர்ச்சி ஏற்படுத்தினார். சில பல காரணங்களால் இன்று ஆட்சி இல்லை. ஆனால், ஆட்சியை நடத்துகிற கட்சியாக அதிமுக செயல்படுகிறது.
‘அல்வா’வில் பல வகை உண்டு. ஆனால், வாயிலே அல்வா கிண்டுகிறவர்கள் திமுகவினர். தேர்தலுக்கு வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு எதையும் செய்வதில்லை’’ என்றார்.
முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசுகையில், ‘‘எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி இந்த தேர்தலில் மக்களை நேரடியாக வந்து சந்திக்கிறார். ஆனால், வெற்று வாக்குறுதிகளை கொடுத்து முதலமைச்சரான ஸ்டாலின், மக்களை சந்திக்க மனமில்லாமல் சென்னையில் இருந்துகொண்டு காணொலி மூலம் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். மதுரைக்கு பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டம் அதிமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு இருந்த தடையை நீக்கப்பட்டது இந்த ஆட்சியில்தான். மதுரைக்கு அதிக முறை வருகை தந்த ஒரே முதலமைச்சர் கே.பழனிச்சாமி’’ என்றார்.
முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசுகையில், ‘‘மதுரை என்றுமே அதிமுகவின் கோட்டை. கடந்த தேர்தலில் 5 தொகுதிகளை வெற்றி பெற்றுள்ளோம். அதனால், இந்த மாநகராட்சி தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும்’’ என்றார்.