புதுடெல்லி: மக்களவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது லடாக் தொகுதி பாஜக எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் பேசியதாவது: மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக உள்ளது. குறிப்பாக, சீனா மற்றும் திபெத் எல்லையில் வடக்கு பகுதியில் கிராமங்களை முன்னேற்ற, துடிப்பான கிராமம் திட்டம் மூலம்பல்வேறு அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நான் திபெத், சீனா,பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள பகுதியான லடாக்கை சேர்ந்தவன். அங்கு எப்போதும் பதற்றம் நிலவுகிறது. இந்தப் பகுதியை காங்கிரஸ் அரசுகள் பின்தங்கிய பகுதியாகவே வைத்திருந்தன. மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. பாஜக ஆட்சியில் லடாக் பகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இப்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வெட்கமே இல்லாமல் லடாக்கில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்கின்றனர்.
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோதுதான் கல்வான் பள்ளத்தாக்கின் பெரும் பகுதியை சீனாவிடம் இழந்தோம். இழந்த பகுதி அப்படியே உள்ளது. அதன் பிறகு ஒரு அங்குல நிலத்தைக் கூட நாம் இழக்கவில்லை. நேரு காலத்தில் இழந்த அக்சய் சின் பகுதியை மீட்போம் என்று 1962 முதல் 2019-வரை ஒரு தேர்தல் அறிக்கையில் கூட காங்கிரஸ் கூறாதது ஏன்? சீனாவுக்கு பயப்படுகிறீர்களா? நேருவின் நற்பெயர் பாதிக்கப்படும் என்று அச்சமா? எல்லை களின் பாதுகாப்பிலும் அ்ந்தப் பகுதிகளின் முன்னேற்றத்திலும் பாஜக அரசு அக்கறை கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.