குமரி: “திருக்குறளைச் சொல்லித் தமிழர்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கும் பிரதமர் மோடி, திருவள்ளுவர் வாழ்ந்த தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணிக்கிறார்” என்று குமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், “மழை – வெள்ளம் காரணமாக, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பெரும்பாதிப்பை அடைந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 15 அன்று உடனடியாக நான் நேரில் வந்து பாதிப்புகளை ஆய்வுசெய்தேன். வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளவும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை புனரமைக்கவும் விரைவில் நிதி வழங்கிடக் கோரி பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனால் இதுவரை நாம் கேட்ட நிவாரண நிதி வரவில்லை. எப்போது முழுவதுமாக வழங்குவார்கள் என்பதும் தெரியவில்லை. மழை வெள்ள நிவாரண நிதி மட்டுமல்ல, நாம் கேட்ட எந்தப் பேரிடர் நிவாரண நிதியையும் இதுவரை முழுதாகத் தரவில்லை. பிரதமருக்குக் கடிதம் எழுதியாயிற்று. ஒன்றிய அமைச்சர்களை நேரில் பார்த்து – மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பைச் சொல்லியாகி விட்டது.
நாடாளுமன்றத்திலும் நமது உறுப்பினர்கள் முறையிட்டாகிவிட்டது. ஆனால், இப்போதுகூட பட்ஜெட் தாக்கல் செய்த ஒன்றிய பாஜக அரசு, நமது மக்கள்நலத் திட்டங்கள் எதற்கும் நிதி ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்களையும் புறக்கணித்திருக்கிறார்கள். திருக்குறளைச் சொல்லித் தமிழர்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கும் பிரதமர் மோடி, திருவள்ளுவர் வாழ்ந்த தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணிக்கிறார். திருக்குறளை நாங்கள் எப்போதோ உலகம் முழுக்கக் கொண்டு சேர்த்துவிட்டோம். இந்தத் தேசத்துக்காகப் போராடிய தலைவர்களுக்கு நாங்கள் விழா எடுத்துக் கொண்டாடுகிறோம். அதைப்பற்றி யாரும் கவலைப்படுவது போல நடிக்க வேண்டாம். நீங்கள் உண்மையிலேயே கவலைப்பட வேண்டியதெல்லாம், மக்களையும் நாட்டையும் இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டோமே என்றுதான் கவலைப்பட வேண்டும்.
ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை எங்கே? பேரிடர் நிவாரண நிதி எங்கே? தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எங்கே? தமிழ்மொழிக்குரிய முக்கியத்துவம் எங்கே? இதற்கெல்லாம் உங்களிடம் இருந்து பதில் வராது. ஆனால் ‘வணக்கம்’ என்ற ஒரே சொல்லால் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறீர்கள். தமிழ்நாட்டு மக்கள் ஏமாறவும் மாட்டார்கள்; ஏமாற்றவும் முடியாது. இதையெல்லாம் இந்த உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் ஏன் சொல்கிறேன் என்றால், உரத்துக்கான மானியத்தைக் குறைத்துவிட்டீர்கள். உணவுக்கான மானியத்தைக் குறைத்துவிட்டீர்கள். ஏழை – எளியவர்கள் கையில் ஒரு பைசா கூட இருக்கக் கூடாது என்கிற எண்ணத்துடன் மகாத்மா காந்தி பெயரில் அமைந்த 100 நாள் வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்கான நிதியை அடியோடு குறைத்துவிட்டீர்கள். அதனால்தான் இதையெல்லாம் சொல்லவேண்டி உள்ளது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பதற்கு சமீபத்திய மழை வெள்ளப் பாதிப்புகளே சாட்சியாக இருக்கிறது.
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைப் பார்வையிட ஒன்றியக்குழு வந்தது. மாநிலம் முழுதும் சுற்றிப் பார்த்தார்கள். என்னையும் அவர்கள் கோட்டையில் வந்து சந்தித்தார்கள். தமிழ்நாட்டில் கனமழை வெள்ளப் பாதிப்புகளைச் சீரமைக்கத் தற்காலிகமாகச் சீரமைப்புப் பணிகளுக்கு 1,510 கோடி ருபாயும் நிரந்தரச் சீரமப்புப் பணிகளுக்காக 4,719 கோடி ரூபாயும் என மொத்தம் 6,230 கோடி ருபாய் தேவை என்று மூன்று விரிவான அறிக்கைகளை அனுப்பி ஒன்றிய அரசை நாம் கேட்டுக் கொண்டோம். எந்த நடவடிக்கையும் இல்லாததால், டிசம்பர் 29 அன்று, பிரதமருக்கும் கடிதம் எழுதினேன். தேவையான நிதியை விடுவிக்க உள்துறை அமைச்சகத்தை அறிவுறுத்த வலியுறுத்தினேன்.
இதுவரை நிதி எதுவும் ஒன்றிய அரசிடம் இருந்து வரவில்லை. ஏற்கனவே கரோனா காலம் என்பதால் நிதி நெருக்கடி அதிகமாக உள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய அவசியம் மாநில அரசுக்கு இருக்கிறது. இந்தச் சூழலில் மழை-வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியைத் தர ஒன்றிய அரசு தாமதிப்பது என்ன நியாயம். ஏற்கனவே சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி., என்று சொல்லி முழுக்க முழுக்க நமது நிதி ஆதாரங்கள் ஒன்றிய அரசிடம் போய்விடுகிறது. மாநில அரசுக்கு வர வேண்டிய வருவாய், ஒன்றிய அரசின் கைக்குப் போய்விடுகிறது.
இப்போது, லேட்டஸ்டாக, பத்திரப் பதிவு வருவாயையும் மாநிலங்களுக்குக் கிடைக்காமல் செய்ய ஒரே நாடு – ஒரே பத்திரப்பதிவு என்ற திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறார்கள். மாநில அரசிடம் இவர்கள் விட்டுவைத்திருக்கும் வருவாய்களில் பத்திரப்பதிவு வருவாய் முக்கியமானது ஆகும். அதிலும் கைவைக்கிறார்கள் என்றால், மாநில அரசுகளின் நிதி உரிமையை முழுக்க முழுக்க இவர்களே விழுங்கி ஏப்பம்விடப் பார்க்கிறார்களா?. பிறகு, மாநிலங்கள் தங்கள் அரசுகளை எப்படி நடத்துவது? மாநிலங்கள் தங்கள் மக்களை எப்படிப் பாதுகாப்பது?
மாநிலங்களோட உரிமைகளைப் பறிக்க நினைப்பது மூலமாக, எதைச் சாதிக்க நினைக்கிறீர்கள்? மாநிலங்கள்தானே – இந்த நாடு எனும் அழகிய மாளிகையைத் தாங்கி நிற்கும் தூண்கள்! அதைத்தானே ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் ‘Union of States’-என்று சொன்னார். அரசியலமைப்புச் சட்டத்தில் இருப்பதைத்தானே அவர் சொன்னார். அது ஏன் பிரதமர் மோடிக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. நீங்களும் குஜராத் முதலமைச்சராக இருந்துவிட்டுத்தானே – இப்போது பிரதமராக ஆகியிருக்கிறீர்கள். அப்போது மாநில உரிமைகளைப் பற்றி நீங்களும் பேசினீர்களே.. இப்போது மறந்துவிட்டீர்களா?” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.