இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 13 ரன்னுக்கும், ஷிக்கர் தவான் 10 ரன்னுக்கும் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அதிரடி ஆட்டக்காரரான விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் உடன் கைகோர்த்த ரிஷப் பண்ட் ஜோடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் தங்களது அரைசதத்தை கடந்து ஆடியபோது, ரிஷப் பண்ட் 56 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 6 ரன்னுக்கு தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் ஷ்ரேயாஸ் ஐயர் செஞ்சுரி அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 80 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியாக களமிறங்கிய தீபக் சாகர் நிதானமாகவும் ஆடி 38 ரன்களை சேர்த்தார். தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் தனது பங்குக்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில், அனைத்து விக்கெட்களையும் இழந்து 265 ரன்களை சேர்த்தது.
இதனையடுத்து 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதில் நிக்கோலஸ் பூரான் 34 ரன்களையும், ஓடியன் ஸ்மித் 36 ரன்களும் எடுத்து எடுத்து அசத்தினர். இருப்பினும் அவர்களும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 37.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 169 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி, இந்த ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ்செய்துள்ளது.
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை மோகமத் சிராஜ், ப்ரிசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்களையும், தீபக் சஹர், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.