புதுடெல்லி / பெங்களூரு: காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் அதுகுறித்து விவாதிக்கப்படவில்லை.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 15-வது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில்தமிழக அரசின் சார்பில் நீர்வளத் துறை கூடுதல் செயலர் சந்தீப்சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி அரசு சார்பில் நீர்வளத்துறை செயலர் விக்ராந்த் ராஜா, கர்நாடகா சார்பில் நீர்வளத் துறை கூடுதல் செயலர் ராகேஷ், கேரளா சார்பில் நீர்வளத் துறை செயலர் டி.கே.ஜோஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இக் கூட்டத்தில் மேகேதாட்டு திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைகுறித்து விவாதிக்க வேண்டும் எனகர்நாடகா கோரியது. இதையடுத்துகாவிரி மேலாண்மை ஆணையத்தின் நிகழ்ச்சி நிரலில் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தமிழக அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா, “மேகேதாட்டு திட்டத்துக்கு தமிழக அரசுஎதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இத் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் முறையிட்டுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதுபற்றி விவாதிக்க கூடாது. மேலும்ஆணைய கூட்டங்களில் 4 மாநிலங்களும் ஏற்கும் விஷயத்தைப் பற்றிமட்டுமே விவாதிக்க வேண்டும்” என்றார். இதையடுத்து மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிப்பது தவிர்க்கப்பட்டது.
தொடர்ந்து, தமிழக அரசு சார்பில், “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிதமிழகத்துக்கு கர்நாடக அரசு மாதவாரியாக வழங்கவேண்டிய காவிரிநீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது. இதற்கு கர்நாடகா ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, ஆணைய கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.