உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னணியில் வலம் வருகிறார் எலான் மஸ்க். அதற்கு முக்கியக் காரணம் அவர் நடத்தி வரும் டெஸ்லா கார் நிறுவனமும், அதில் அவர் வைத்திருக்கும் மிகப்பெரிய முதலீடும்தான்! மின்சாரக் கார் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக புகழ்ப்பெற்று விளங்கும் டெஸ்லா நிறுவத்துக்குதான் இப்போது மிகப்பெரிய அவப்பெயரும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, டெஸ்லா நிறுவனத்தில் நிற அடிப்படையிலான இனப்பாகுபாடு காட்டுப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃப்ரீமான்ட் (Fremont) நகரத்தில் இயங்கி வரும் டெஸ்லா கார் தயாரிப்பு தொழிற்சாலையில் தான் தற்போது இந்த பிரச்னை வெடித்திருக்கிறது. சுமார், 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிவரும் இந்த தொழிற்சாலையில், ஆப்ரிக்க-அமெரிக்க இன தொழிலாளர்களிடம் நிறப் பாகுபாடு காட்டப்படுவதாக புகார் எழுந்தது. குறிப்பாக, தொழிற்சாலையில் பணியாற்றும் ஆப்ரிக்க-அமெரிக்க தொழிலாளர்கள் இன அவதூறுகளுக்கு ஆளாக்கப்படுவதாகவும், நிறத்தை குறிப்பிட்டு கேலி கிண்டல் செய்வதாகவும், இனவெறி நகைச்சுவைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்தவண்ணம் இருந்தன.
இந்த நிலையில், இனப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட, தொழிற்சாலையில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஆப்ரிக்க-அமெரிக்க தொழிலாளர்கள், கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நியாயமான வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதித்துறை (Department of Fair Employment and Housing- (DFEH)) என்ற சிவில் உரிமை அமைப்பிடம் புகாரளித்தனர்.
அந்தப் புகார்களை பெற்ற டி.எஃப்.இ.எச் அமைப்பு, கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை அலமேடா மாகாணத்தில் உள்ள கலிஃபோர்னியா உயர் நீதிமன்றத்தில் (California Superior Court, Alameda County), டெஸ்லா தொழிற்சாலையின்மீது இனப்பாகுபாடு வழக்கு தொடர்ந்தது.
டி.எஃப்.இ.எச் அமைப்பின் இயக்குநர் கெவின் கிரிஷ்(Kevin Kish) எழுத்துப்பூர்வமாக அளித்த புகார் மனுவில், “டெஸ்லா நிறுவனத்தின் ஃப்ரீமன்ட் தொழிற்சாலையில் இன ரீதியில் பிரிவினை காட்டப்படுகிறது. ஆப்ரிக்க-அமெரிக்கர் அல்லாத தொழிலாளர்களுக்கு ஆலையில் வேலை ஒதுக்கீடு, ஒழுக்கம், ஊதியம் மற்றும் பதவி உயர்வு ஆகிவயற்றில் அடிக்கடி முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால், அங்கு பணியாற்றும் ஆப்ரிக்க-அமெரிக்க தொழிலாளர்கள் இன அவதூறுகளுக்கு ஆளாவதோடு, உடல்ரீதியிலான ஒடுக்குமுறையையும் சந்தித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், ஆப்ரிக்க-அமெரிக்கர் என்ற ஒரே காரணத்துக்காக வேலை ஒதுக்கீடுகள், ஒழுக்கம், ஊதியம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றிலும் மிகக்கடுமையான பாரபட்சம் காட்டப்படுகிறது” என தெரிவித்திருக்கிறார்.
மேலும், “ஆப்ரிக்க அமெரிக்கர்களுடன் ஒப்பிடும்போது, மற்ற தொழிலாளர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கையில் மென்மையான போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது” எனவும் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுகுறித்த செய்திகள் ஏற்கெனவே அமெரிக்காவின் பிரபலமான வால்ஸ்ட்ரீட், ப்ளூபெர்க் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்த நிலையில், இனப்பாகுபாடு குற்றச்சாட்டு விளக்கம் அளித்திருக்கும் டெஸ்லா நிறுவனம், “இது உண்மைக்கு புறம்பான, நியாயமற்ற வழக்கு” என கூறியிருக்கிறது. மேலும், “அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பான, மரியாதைக்குரிய, நியாயமான பணியை வழங்க தங்கள் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது” எனவும் விளக்கமளித்திருக்கிறது. இந்த விவாகரம் குறித்து டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இதுவரையில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதுபோன்ற இனப்பாகுபாடு புகார்களில் டெஸ்லா நிறுவனம் சிக்குவது புதிதல்ல; ஏற்கெனவே கடந்த 2020-ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தில் லிஃப்ட் இயக்குபவராக பணியாற்றி வந்த ஓவன் டியாஸ் என்ற ஊழியர், “தன்மீது டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இனரீதியில் துன்புறுத்தல் கொடுத்தனர், அதை டெஸ்லா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தனக்கு நீதி கிடைக்க வேண்டும்” எனக்கூறி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி லிலியம் ஓரிக், “ஊழியர் ஓவன் டியாஸ் மீதான இனரீதியான துன்புறத்தலை தடுக்க டெஸ்லா நிறுவனம் தவறியிருக்கிறது. எனவே அவருக்கு 1,000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என அதிரடியாக உத்தரவிட்டார். இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இனப் பாகுபாடு புகார் அளித்திருப்பதாக, டி.எஃப்.இ.எச் அமைப்பு தொடர்ந்திருக்கும் வழக்கால் ஆடிப்போயிருக்கிறது!