பிரதமர் பதவியிலிருந்து நரேந்திர மோடியை விரட்டியடிப்பேன் என்று தென் மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் ஒருவர் ஆவேசமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வேறு யாருமல்ல,
தெலங்கானா
முதல்வர் கே.சந்திரசேகர ராவ்தான் (கே.சி.ஆர்). ஜாங்கோன் மாவட்டம் யஷ்வந்த்பூரில் நடந்த கூட்டத்தில் கே.சி.ஆர். பேசினார். அப்போது அவர் மத்திய
பாஜக
அரசை கடுமையாக சாடினார்.
கே.சி.ஆர். பேசுகையில், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆதரவு தர வேண்டும். அப்படித் தரத் தவறினால் பிரதமர்
நரேந்திர மோடி
அவரது பதவியிலிருந்து விரட்டி அடிக்கப்படுவார்.
தேவைப்பட்டால் டெல்லி கோட்டையைத் தகர்க்க நான் தேசிய அரசியலுக்கும் போகத் தயாராக இருக்கிறேன். தேசிய அரசியலில் முக்கியப் பங்காற்ற நான் தயாராக இருக்கிறேன். நமது நாட்டுக்காக நான் போராடத் தயாராகி விட்டேன். மக்கள் என்னை ஆசிர்வதித்தால், டெல்லி கோட்டையை உடைத்துத் தரைமட்டமாக்க நான் ரெடி. நரேந்திர மோடிக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். உங்களது மிரட்டல்களைப் பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள்.
நீங்கள் (மத்திய அரசு) எங்களுக்கு எந்தத் திட்டத்தையும் தர மறுத்தால், மருத்துவக் கல்லூரிகளைத் தர மறுத்தால், எங்களுக்கு ஆதரவு தரத் தவறினால், உங்களை பதவியிலிருந்தும், அதிகாரத்திலிருந்தும் துரத்தியடிப்போம். எங்களுக்கு உதவும் அரசை அங்கு கொண்டு வந்து அமர வைப்போம்.
மத்திய அரசு வலியுறுத்தி வரும் மின்சார சீர்திருத்தங்களை தெலங்கானா மாநிலத்தில் நாங்கள் அமல்படுத்த மாட்டோம். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கி விட்டோம் என்று பேசி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் உண்மையில் எரிபொருள் விலைதான் இரட்டிப்பாகியுள்ளது. விவசாயிகளின் முக்கிய ஆதாரமான உரத்தின் விலைதான் இரட்டிப்பாகியுள்ளது.
ஜாங்கோன் மாவட்டத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தொண்டர்களை பாஜகவினர் சிலர் தாக்கியதாக நான் கேள்விப்பட்டேன். காவி கட்சிக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன்.. யாராவது எங்களது கட்சியினரைத் தொட்டால் அழித்து விடுவோம் என்றார் கே.சி.ஆர்.
ஏன் திடீர் கோபம்?
சமீப காலமாக கே.சி.ஆரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவையும் கடுமையாக எச்சரித்து வருகிறார் கே.சி.ஆர். தென்னிந்தியாவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் வேலைகளிலும் கூட அவர் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
சமீபத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. பாஜகவினரை
டிஆர்எஸ்
கட்சியினர் தடிகளாலும், கைகளாலும் அடித்து விரட்டியதால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால், குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்து பிரதமர் பேசி வருவதே முக்கியமாக தெரிகிறது. சமீப காலமாக குடும்ப அரசியல் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார் பிரதமர் மோடி. தெலங்கானாவையும் அவர் குறிப்பிட்டுச் சொல்லி விமர்சித்துள்ளார். இதுதான் கே.சி.ஆருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தெலங்கானா அரசியலில் கே.சி.ஆரின் மகன் கே.டி.ஆர்., மகள் கவிதா ஆகியோரும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். கே.சி.ஆர். டெல்லி அரசியலுக்கு இடம் பெயர திட்டமிட்டுள்ளார். தனது மகனை முதல்வராக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதனால்தான் அவர் மோடிக்கு எதிராக சமீப காலமாக கோபம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.