Hijab row: தேவையில்லாமல் பேசக் கூடாது.. உலக நாடுகளுக்கு இந்தியா எச்சரிக்கை

இந்தியாவின் ஹிஜாப் பிரச்சினை உள்நாட்டு விவகாரம். அது குறித்து உள்நோக்கத்துடன் கூடிய கருத்துக்களைக் கூறக் கூடாது என்று உலக நாடுகளுக்கு
இந்தியா
எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகத்தில் கல்வி நிறுவனங்களில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதை சில கல்லூரிகள் தடை செய்தன. இதையடுத்து அந்த மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு எதிராக இந்துத்வா மாணவர்களும் காவித் துண்டு, தலைப்பாகை அணிந்து போராட்டத்தில் குதித்தனர். இவர்களை எதிர்த்து தலித் மாணவர்கள் நீலத் துண்டுடன் போராட்டத்தில் ஈடுபடவே நிலைமை மோசமானது.

இந்த விவகாரம் பின்னர் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்குப் போனது. தற்காலிகமாக மத அடையாளங்களுடன் கல்வி நிறுவனங்களுக்கு வருவதை தடை செய்துள்ளது ஹைகோர்ட். மேல் விசாரணை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது சர்வதேச அளவிலும் பரவியுள்ளது.

கர்நாடக ஹிஜாப் தடை குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஐஆர்எப் எனப்படும் சர்வதேச மத சுதந்திரம் அமைப்பைச் சேர்ந்த ரஷாத் ஹுசேன் என்பவர் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், கர்நாடக கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதித்திருப்பது மத சுதந்திரத்தை தடை செய்வது போலாகும். ஒருவர் தனது மதத்தின் அடையாளத்தை அணிந்து கொள்வது மத சுதந்திரமாகும். இஸ்லாமியப் பெண்கள் அவர்களது மத அடையாளங்களை சுமப்பதை தடுப்பதன் மூலம் பெண்களை அவர்கள் ஒதுக்குகிறார்கள் என்று கூறியுள்ளார்.

ஹூசேன் அமெரிக்க அரசின் உயர் மட்டத்துடன் தொடர்புடையவர் ஆவார். இவர் தான் ஐஆர்எப் அமைப்பின் முதல் முஸ்லீம் தூதர் ஆவார். இதற்கு முன்பு அமெரிக்க அரசில் அவர் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். ஒபாமா அதிபராக இருந்தபோது இஸ்லாமிய ஒத்துழைப்புக் கழகத்தின் சிறப்பு தூதராக இருந்துள்ளார்.

இந்த நிலையில்
மத்திய வெளியுறவுத்துறை
ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கர்நாடக கல்வி நிறுவனங்கள் சிலவற்றில் கடைப்பிடிக்கப்படும் உடைக் கட்டுப்பாடு தொடர்பாக சில நாடுகள் கருத்து தெரிவித்துள்ளது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சியின் விளக்கம்:

கர்நாடக மாநிலத்தின் சில கல்வி நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்படும் உடைக் கட்டுப்பாடு தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், அதுதொடர்பான கட்டமைப்புகள், ஜனநாயக விழுமியங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமூகத் தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்தியாவை நன்கு அறிந்தோர் இதைப் பாராட்டுவார்கள். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக உள்நோக்கத்துடன் கூடிய கருத்துக்களை நாங்கள் விரும்பவில்லை, வரவேற்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.