புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவை வாக்குப்பதிவுகளுக்காக மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் சுமார் 8000 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பாஜகவின் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு சொந்தமான வாகனங்களை எடுக்க வேண்டாம் என ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
பாஜக ஆளும் உ.பி.யில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதன் வாக்குப்பதிவுப் பணிகளின் போக்குவத்திற்காக பல ஆயிரம் வாகனங்கள் தேவைப்படுகின்றன.
இதற்காக, தனியார்களின் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 8000 கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், 1000 சிறிய வாகனங்கள், 500 பேருந்துகள், 1500 டிராக்டர்கள் மற்ற எண்ணிக்கையில் எஸ்யூவி உள்ளிட்ட பெரிய வாகனங்களும் இடம் பெற்றுள்ளன.
இவற்றுக்காக, அரசு ஒரு குறிப்பிட்ட தொகை வாடகையாக வாகன உரிமையாளர்களுக்கு அளிக்கிறது. மிகவும் தாமதமாகக் கைக்கு கிடைக்கும் இந்த தொகை, பெரும்பாலும் அவர்களுக்கு பொதுமக்களின் சந்தைகளில் கிடைப்பதை விடக் குறையாகவே கிடைக்கிறது.
இதனால், தேர்தல் பணிகளுக்காக அரசிற்கு வாகனங்கள் அனுப்ப தனியார் தயங்குவது உண்டு. எனினும், தனியாரின் விருப்பத்திற்கு எதிராகவே அதிகபட்சமான வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டு தேர்தல் பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இதில், உ.பி.யில் பாஜக மாநில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு சொந்தமாகவும் பல வாகனங்கள் உள்ளன. அவர்களது கல்லூரி உள்ளிட்ட பல நிறுவனங்களில் பயனாகுவனவற்றை தேர்தல் பணிக்கு அளிக்க மறுப்பதாகத் தெரிகிறது.
இதற்காக தம் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என உ.பி. மாநில அரசு அதிகாரிகளிடம் வற்புறுத்தப்படுவதாகக் புகார் எழுந்துள்ளது. இதை ஏற்று உ.பி. அரசின் அதிகாரிகளும் பாஜகவினர் வாகனங்களை கையகப்படுத்தாமல் விட்டு வைத்திருப்பதாகவும் அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுபோல், பாஜகவினரது எனத் தெரியாமல், உபியின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மஹேஷ் சந்திர குப்தா, குஷாகாரா சாகர், எம்எல்ஏ உள்ளிட்ட சிலரது வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டன.
பிறகு அவற்றின் உரிமையாளர் அடையாளங்கள் அறிந்து அரசு பணியிலிருந்து அவை விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், இந்த தேர்தல் பணிகளுக்காக தம் வாகனங்களை தர மறுப்பவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.