டெல்லி : ஹிஜாப் பிரச்சனையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலான கருத்துக்களை தெரிவிப்பதை பிற நாடுகள் தவிர்க்க வேண்டும் என ஒன்றிய அரசு கேட்டு கொண்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் கல்வி நிலையங்களுக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி சில நாடுகளும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளன. இதனை குறிப்பிட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கருத்து தெரிவித்துள்ளார். அதில் கர்நாடக மாநிலத்தில் சில கல்வி நிலையங்களில் முன்வந்துள்ள ஹிஜாப் பிரச்சனை குறித்து பெங்களூரு உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருவதை சுட்டிக் காட்டியுள்ளார். இந்தியாவின் அரசியல் அமைப்பு, நீதி நிர்வாகம் மற்றும் ஜனநாயக வரம்புகளின் அடிப்படையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், பிற நாடுகள் இது போன்ற இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.