11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து ஓட்டு போடலாம்- மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை:

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

எனவே, 38 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள், தங்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு உள்ளவர்களும் அல்லது வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள கீழ்க்காணும் 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.

ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு.

ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய -மாநில அரசு, மத்திய- மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், பாராளுமன்ற-சட்டமன்ற -சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை போன்றவைகளாகும்.

எனவே, நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்களில் வாக்குப்பதிவின்போது ஆள் மாறாட்டங்களைத் தவிர்க்க மேற்காணும் அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.