மும்பை: ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் அதன் தலைவர் அனில் அம்பானி மற்றும் 3 பேருக்கு பங்குச்சந்தை உள்ளிட்ட செக்யூரிட்டிஸ் மார்கெட்டில் பங்கேற்க தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் மறைவுக்கு பின், அவரது வாரிசுகளான முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் சண்டையிட்டு பிரித்துக் கொண்டனர். சொத்துக்களை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, குடும்ப சண்டை உருவாகி பின்னர் தாய் மத்தியஸ்தம் செய்து சொத்துக்கள் இருவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்பட்டது. இருவரும் வெவ்வேறு தொழில்கள் என ஆளுக்கு ஒரு திசையில் பயணம் செய்தனர்.
அண்ணன் முகேஷ் அம்பானி புதிய, புதிய தொழில்களை தொடங்கி பணத்தை குவித்து வருகிறார். இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர் என்ற பெருமையை தொட்டுள்ளார். அதேசமயம், தம்பி அனில் தொடங்கிய ரிலையன்ஸ் பவர் நிறுவனம் முதல் பல தொழில்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. வில்லங்கமாக கடன் பிரச்சனையில் சிக்கி வெளியில் வர முடியாமல் முழிபிதுங்கி நிற்கிறார். அவரை நம்பி கடன் கொடுத்த நிறுவனங்கள் பெரும் நெருக்கடி கொடுக்க சொத்துக்களை விற்று கடனை அடைக்க முயற்சி எடுத்து வருகிறார்.
சீனாவில் உள்ள மூன்று பெரிய வங்கிகள் தங்களுக்கு அனில் அம்பானி பணம் திருப்பித் தராததால் லண்டன் கோர்ட்டை அணுகியது. இந்த வழக்கில் வாங்கிய கடனை திருப்பித் தருவதற்கு ஒரு பைசாக் கூட இல்லை என்று லண்டன் நீதிமன்றத்தில் அனில் அம்பானி கூறினார்.
இதுமட்டுமின்றி எரிக்ஸன் நிறுவனத்துக்கு கடன் தொகையை செலுத்த வேண்டிய வழக்கில் உச்ச நீதிமன்ற கெடுவையடுத்து அனில் அம்பானி சிறை செல்வதை தவிர்க்க சகோதரர் முகேஷ் அம்பானி 260 கோடி ரூபாய் கொடுத்து தக்க தருணத்தில் உதவினார்.
இந்நிலையில் தற்போது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்துக்கு பங்குச்சந்தை மற்றும் பாண்டு வெளியீடு உட்பட செக்யூரிட்டீஸ் சந்தையல் பங்கு பெற தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது. மேலும் அனில் அம்பானி மற்றும் 3 பேருக்கும் தடை விதித்துள்ளன. மற்ற 3 பேர் அமித் பாப்னா, ரவீந்திர சுதாகர், பிங்கேஷ் ஆர்.ஷா ஆவர்.
2018-19ஆம் ஆண்டில் சில நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் வழங்கிய கடன்கள் குறித்து செபி விசாரணை நடத்துகிறது. விசாரணை தொடங்கவுள்ள நிலையில் அனில் அம்பானி உள்ளிட்டோருக்கு செபி இடைக்கால தடை விதித்துள்ளது.
செபியின் 100 பக்க அறிக்கையில் அனில் அம்பானியின் நிறுவனம் விதிமுறைகளின் மொத்த அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் தனது வரம்பைத் தாண்டி நடந்துகொண்டது தெரியவந்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து பணத்தை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து இந்த தடையை செபி விதித்துள்ளது.
‘‘நிதியை மாற்றி விடுதல், கணக்கு புத்தகங்களில் தவறாக திருத்தம் செய்தல், நிதிநிலை அறிக்கைகளை பொய்யாக மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனத்தின் நடத்தை மற்றும் செயல்பாடு ஆகியவற்றை கணக்கில் கொள்கிறோம்.
உண்மையான தகவல்களைப் பெருமளவில் பொதுமக்களுக்கு வெளியிடாததும், நிறுவனத்தின் முக்கிய மேலாளர்களால் கூட்டாக முறைகேடுகள், பத்திரச் சட்டங்களை மீறுதல் போன்ற செயல்களைத் தொடர்வதை தடுக்க வேண்டிய அவசரத் தேவை இருப்பதாகவும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் மட்டுமின்றி மொத்தம் 28 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அனில் அம்பானி உள்பட தடை விதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் செபியுடன் பதிவுசெய்துகொண்டுள்ள நபர்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், அந்நிறுவனங்களின் இயக்குநர்கள், புரமோட்டர்கள் அனைவரிடமும் தொடர்புவைத்துக்கொள்ள கூடாது எனவும் செபி தெரிவித்துள்ளது.