வேலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாநகராட்சியின் 37-வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ரோஸ்மேரி, வார்டு முழுவதும் தென்னங்கன்றுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சியின் 37-வது வார்டில் அகில இந்திய துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் சுயேச்சை வேட்பாளராக ரோஸ்மேரி போட்டியிடுகிறார். அவருக்கு தென்னமர சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை வாக்காளர் மனதில் கொண்டு சேர்க்கும் வகையில், இருசக்கர வாகனத்தில் தென்னங்கன்றை வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்.19-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வாக்காளர்களிடம் பல்வேறு வித்தியாசமான உத்திகளை கையாண்டு வாக்கு சேகரித்து வரும் நிலையில், வார்டு முழுவதும் இருச்சக்கர வாகனத்தில் தென்னங்கன்றுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ரோஸ்மேரி கவனிக்கத்தக்க வேட்பாளராகிறார்.