லக்னோ: உத்தரகாண்ட், கோவா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 165 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. அதனால் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. உத்தரபிரதேசத்தில் மட்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் 58 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 61 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் நாளை மறுநாள் (பிப். 14) உத்தரபிரதேச மாநிலத்திற்கு உட்பட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல் கோவாவில் ஒரே கட்டமாக 40 தொகுதிகளிலும், உத்தரகாண்டில் ஒரே கட்டமாக 70 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கோவாவை பொருத்தமட்டில் 332 வேட்பாளர்களும், உத்தரகாண்டில் 632 வேட்பாளர்களும், உத்தரபிரதேசத்தின் 55 தொகுதிகளில் 586 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். நாளை மறுநாள் மேற்கண்ட இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை 5 மணியுடன் மேற்கண்ட மாநிலம் மற்றும் தொகுதிகளில் பிரசாரம் ஓய்வதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. உத்தரகாண்ட், கோவா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 165 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அரசியல் நிபுணர்களின் கூற்றுப்படி, உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கோவாவில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மேற்கண்ட இரு மாநிலங்களிலும் பாஜகவை வீழ்த்த காங்கிரசும், ஆம்ஆத்மியும் கடுமையான போட்டியை ஏற்படுத்தி உள்ளன. உத்தரபிரதேசத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் ஆளும் பாஜகவுக்கு அதிக சவால்கள் நிறைந்த இடங்களாகும். வாக்குப்பதிவு நடைபெறும் 55 தொகுதிகளில் சிறுபான்மை மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இது தவிர, சிறுபான்மை தலைவர்களின் செல்வாக்கும் இந்த தொகுதிகளில் அதிகமாக இருக்கிறது. அதனால், அவர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கின்றனரோ, அவர்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு இருக்கும். மேற்கண்ட 55 தொகுதிகளில் போட்டியிடும் 25 சதவீத வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 55 எம்எல்ஏ பதவிக்கு 586 பேர் போட்டியிடும் நிலையில் 584 பேரின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி கிட்டத்தட்ட 147 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. முக்கிய கட்சிகளில், சமாஜ்வாதி கட்சியின் 52 வேட்பாளர்களில் 35 பேரும், காங்கிரஸ் கட்சியின் 54 வேட்பாளர்களில் 23 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியின் 55 வேட்பாளர்களில் 20 பேரும், பாஜகவின் 53 வேட்பாளர்களில் 18 பேரும் குற்றவழக்கில் தொடர்புடையவர்களாக உள்ளனர். இவர்களில் 6 பேர் பெண்களுக்கு எதிரான குற்றங்களையும், ஒருவர் கொலை வழக்கிலும் ெதாடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.