ஹிஜாபை யாரேனும் தொட முயன்றால் அவரது கைகள் வெட்டப்படும் என்று
சமாஜ்வாடி
தலைவர்
ரூபினா கானம்
கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதால் சர்ச்சைகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்த நிலையில் சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த பெண் தலைவர் ரூபினா கானம் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
ரூபினா கானம் அலிகாரில் கர்நாடக ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ஹிஜாபை தைரியம் இருந்தால் தொட்டுப் பார்க்கட்டும். தொடுபவரின் கைகள் வெட்டப்படும். இந்தியாவின் மகள்கள் மற்றும் சகோதரிகளின் மானத்துடன் யாரேனும் விளையாட முயன்றால், அவர்கள் ஜான்சி ராணிகளாக மாறுவார்கள். ரஸியா சுல்தானாவாக மாறுவார்கள். ஹிஜாபைத் தொடுவது யாராக இருந்தாலும் அவர்களது கைகள் வெட்டப்படும்.
இந்தியா வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் நாடாகும். நெற்றியில் திலகம் இடுவதோ, டர்பன் அணிவதோ, ஹிஜாப் அணிவதோ பெரிய விஷயமே இல்லை. இது அவரவர் விருப்பம். தலையில் முக்காடு போடுவதும், ஹிஜாப் அணிவதும் இந்திய கலாச்சாரம், பாரம்பரியத்தின் ஒரு அங்கம். அதைப் பிரித்துப் பார்க்க முடியாது. இதில் அரசியல் செய்ய முனைவது அதிர்ச்சி தருகிறது. பெண்களை பலவீனமானவர்கள் என்று நினைத்து விடாதீர்கள் என்றார் அவர்.
உ.பியில் தற்போது சட்டசபைத் தேர்தல் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹிஜாப் பிரச்சினை உ.பி. தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. கர்நாடக தடையை உ.பி. இஸ்லாமியப் பெண்கள் மத்தியில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது சமாஜ்வாடிக் கட்சி. காங்கிரஸும் இந்த விஷயத்தை தேர்தலில் பயன்படுத்துவதால் பாஜக குழப்பமடைந்துள்ளது.