உத்தர்காண்ட்: இந்து அவமதிப்பே காங்கிரஸுக்கு எப்போதும் இலக்கு. இதற்காக கட்சிக்குள் அவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு இவ்வேளையை செய்கின்றனர் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் சட்டப்பேரவைக்கு வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அங்கு இறுதிக்கட்டப் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தெஹ்ரி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், “இந்து அவமதிப்பை மேற்கொள்வதில் காங்கிரஸில் கடும் போட்டி நிலவுகிறது. தாங்கள் இந்துதான் என்றே அடையாளம் தெரியாதவர்கள் இன்று இந்து என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்ல முற்படுகின்றனர். சுவாமி விவேகனந்தா, இந்து என்று சொல்வதில் பெருமிதம் கொள்ளுங்கள் என்றார். ஏனெனில் இந்து என்பது ஒரு மதவாத வார்த்தை அல்ல. அது ஒரு கலாச்சார அடையாளம். 1947லேயே அயோத்தியில் ராமர் கோயிலை காங்கிரஸ் கட்டியிருக்கலாம். ஆனால் அவர்களின் கொள்கையில் அது எப்போதுமே இருந்ததில்லை.
இந்தியாவில் உள்ள நம்பிக்கை என்னவோ அதை எதிர்ப்பதில் எப்போதும் காங்கிரஸ் கவனமாக இருக்கும். அதனால்தான் அவர்கள் ராமர் கோயிலை எழுப்புவதையும் எதிர்த்தனர்.
இன்று நாட்டிலேயே உத்தரப் பிரதேசம் பாதுகாப்பான மாநிலமாக உள்ளது. உத்தர்காண்ட் மாநிலமும் அவ்வாறு ஆக வேண்டும். இங்கு கிரிமினல்களும், ரவுடிகளும் நுழைந்துவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. நாம் உத்தர்காண்டையும் உ.பி.யைப் போல் பாதுகாப்பான மாநிலமாக்க வேண்டும்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்தேன், அவர்கள் உத்தர்காண்டில் முஸ்லிம் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
உத்தர்காண்ட் மாநிலம் கலாச்சாரம், பாரம்பரிய வளம் மிக்க மாநிலம். இங்கு சுற்றுலா சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு பெரும் வாய்ப்புள்ளது. அவற்றை பாஜக மேம்படுத்தும்” என்றார்.