திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள டிடி.595 காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில், கூட்டுறவுத்துறை மூலம் நகைக்கடன் தள்ளுபடி செய்தவர்களுக்கு சான்றிதழ்களுடன் நகைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் 5 பவுனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி என அறிவித்தார். அதன்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா நிவாரண நிதி வழங்கிய பின்பு அதன் தொடர்ச்சியாக கூட்டுறவுத்துறையின் மூலம் பொது நகைக்கடன் 2021 தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு அவர்களுக்குரிய நகைகளையும், சான்றிதழ்களையும் பயனாளிகளுக்கு வழங்கும் பணி முதல் முறையாக திண்டுக்கல்லில் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் 13,47,033 கடன்தாரர்களில் 10,18,066 பயனாளிகள் தகுதி உள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நகைகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. நகைக்கடன் தள்ளுபடியில் தகுதி உள்ள நபர்கள் விடுபட்டு போயிருந்தால் எப்போது வேண்டுமானாலும் தகுந்த ஆதாரங்களைக் கொடுத்து நகைக்கடன் தள்ளுபடியைப் பெறலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் பொது நகைக்கடன் 50,120 பயனாளிகளுக்கு ரூ.181 கோடி மதிப்பில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ்களும், நகைகளும் வழங்கப்பட உள்ளது.
Also Read: நகைக்கடன் தள்ளுபடி விவகாரம்: முத்தரசன் கோரிக்கையும் கூட்டுறவு சம்மேளன தலைவரின் விளக்கமும்!
இந்த காமாட்சிபுரம் கூட்டுறவு சங்கம் அருகில் தேர்தல் நடக்கும் பேரூராட்சியிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகமாக உள்ளது. தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி ஏற்கெனவே அறிவித்த நலத்திட்டம் என்பதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நகைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுறவு சங்கத்தில் மட்டும் 103 பயனாளிகள் பயன்பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு ரூ.50,71,000 மதிப்பில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசிற்கு எவ்வளவு நிதி நெருக்கடி இருந்தாலும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நகைகளை வழங்கி வருகிறோம். கூட்டுறவு சங்கத்தலைவர் மாற்று கட்சியைச் சோந்தவராக இருந்தாலும் மக்களுக்கு நன்மை தரக்கூடியது என்பதால் இவ்விழாவில் கலந்துகொண்டுள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கூட்டுறவு சங்கத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் கடன் கேட்க போய் திருப்பி அனுப்பிய காலம் போல் இல்லாமல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் கடனுதவி வழங்கியதோடு அவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளுக்கு பராமரிப்பு நிதியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதுதவிர அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் உயர எல்லா தரப்பு கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.
Also Read: உதயநிதி பிரசாரத்தில்.. `நகைக்கடன் தள்ளுபடி ஆகல; பேரப்பிள்ளைகள் படிக்க உதவுங்க’ -டென்ஷனான நிர்வாகிகள்
குறிப்பாக மகளிருக்கு சிறுதொழில் கடனுதவி, சுயஉதவி குழுவினருக்கு கடனுதவி போன்ற எண்ணற்ற திட்டங்கள் கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறையினருக்கு தொடர்ந்து பணிச்சுமை இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் வகையிலும் நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருவதால் கூட்டுறவுத்துறையினர் முன்பைவிட அதிக அளவில் ஈடுபாடுடன் செயல்பட்டு வருகின்றனர். இனிவரும் காலங்களில் கூட்டுறவுத்துறை மூலம் எல்லா வகையிலும் மக்கள் தேடி வரும் மையங்களாக கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படும்.” எனப் பேசினார்.
இவ்விழாவில் 103 பயனாளிகளுக்கு 50,76,000 ரூபாய் மதிப்பிலான பொது நகைக்கடன் தள்ளுபடிகளை வழங்கி பயனாளிகளுக்கு சான்றிதழ்கள், நகைகளும் வழங்கப்பட்டன.