தேர்தலுக்காக ஊடகங்களில் பிரசார விளம்பரம் செய்பவர்கள் முறையாக முன் அனுமதி பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் மாநில அளவில், நாளிதழ்கள் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் விளம்பரங்களை வெளியிடுவதற்கு மாநில தேர்தல் ஆணையர் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் விண்ணப்பித்து முன்னனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் தயார் செய்யப்பட்டுள்ள விளம்பரத்தின் மாதிரிகளின் 2 நகல்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் முறையாக விண்ணப்பித்து, முன் அனுமதியுடன் விளம்பர எண் பெற்று, பின்னர் நாளிதழ்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் மாவட்ட அளவிலான விளம்பரங்களுக்கு அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன் அனுமதி பெற்று வழங்கப்பட்ட அனுமதி எண்ணுடன் விளம்பரம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.