திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கும், அவரது மைத்துனர் அபிஷேக் பானர்ஜிக்கும் இடையேயான மோதல் முற்றி வரும் சூழலில், அக்கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது.
திரிணமூல் காங்கிரஸில் மம்தா பானர்ஜிக்கு அடுத்தப்படியாக அதிக அதிகாரம் கொண்ட தலைவராக வலம் வருபவர் அபிஷேக் பானர்ஜி. மம்தாவின் மைத்துனரான இவர், அக்கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில், மம்தா பானர்ஜியின் ஆலோசனைகளை கேட்டு அப்படியே செயல்படுத்தி வந்த அபிஷேக் பானர்ஜி, சமீபகாலமாக தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வருவதாக புகார் எழுந்தது.
குறிப்பாக, திரிணமூல் காங்கிரஸில் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற கொள்கையை புகுத்த அபிஷேக் பானர்ஜி முனைந்து வருகிறார். ஆனால், மம்தா பானர்ஜிக்கு இந்தக் கொள்கையில் சிறிதும் உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர் உதவி?
இருந்தபோதிலும், கட்சியில் தனக்கு இருக்கும் ஆதரவாளர்களின் துணையுடன், இந்தக் கொள்கையை அபிஷேக் செயல்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் திரிணமூல் காங்கிரஸுக்கு அரசியல் ஆலோசனை வழங்கி வரும் ஐ-பேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர் மறைமுகமாக அபிஷேக்குக்கு உதவி வருவதாக தெரிகிறது. இதற்கு, மம்தா பானர்ஜியின் ஆதரவாளர்களும், கட்சியின் மூத்த தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் மம்தா பானர்ஜிக்கும், அபிஷேக் பானர்ஜிக்கும் இடையேயான மோதல் முற்றி வருவதாக தெரிகிறது. இந்நிலையில், மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இதனால் அபிஷேக் பானர்ஜி மீது கட்சி ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM