புதுடெல்லி: சிங்கப்பூரில் விமான கண்காட்சி -2022-ல் இலகு ரக தேஜஸ் போர் விமானம் பங்கேற்கிறது.
விமானப்படையை மேலும் பலப்படுத்தும் வகையில் நவீன தேஜஸ் மார்க் 1 ரக போர் விமானம் கடந்த ஆண்டு விமானப்படையில் இணைக்கப்பட்டது. தேஜஸ் ரக விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. கூடுதல் சிறப்பு அம்சங்கள், தாக்குதல், கண்காணிப்பு திறன் கொண்டவை.
இந்த இலகு ரக விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்திடம் இருந்து இந்த விமானங்கள் இந்திய விமானப்படைக்கு வாங்கப்படுகிறது. இந்தநிலையில் சிங்கப்பூரில் விமான கண்காட்சி -2022-ல் இலகு ரக தேஜஸ் போர் விமானம் பங்கேற்கிறது.
சிங்கப்பூரில் நடைபெறும் விமான கண்காட்சி -2022-ல் பங்கேற்க 44 பேரைக் கொண்ட இந்திய விமானப்படையினர் சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தனர். இந்த விமான கண்காட்சி வரும் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சர்வதேச விமான தொழில்துறை இரண்டாண்டுக்கு ஒருமுறை தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்த சிங்கப்பூர் விமானக் கண்காட்சி வழிவகுத்துள்ளது.
பல்வேறு நாடுகள் பங்கேற்கும் இக்கண்காட்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் எம்கே-I போர் விமானத்தை இந்திய விமானப்படை காட்சிப்படுத்தவுள்ளது.
அத்துடன் ராயல் சிங்கப்பூர் விமானப்படை மற்றும் பிறநாடுகளின் பிரதிநிதிகளுடன் இந்திய விமானப்படையினர் உரையாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.