கேப் கனவரல்:அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான, ‘நாசா’ விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ள பிரமாண்ட ‘டெலஸ்கோப்’ எனப்படும் தொலைநோக்கி, நட்சத்திர ஒளியின் முதல் படத்தை அனுப்பி வைத்துள்ளது. மேலும், ‘செல்பி’ எடுத்தும் அனுப்பி வைத்துள்ளது.
விண்வெளி தொடர்பான ஆய்வுகளுக்காக, 1990ல் நாசா அனுப்பிய ‘ஹப்பிள்’ என பெயரிடப்பட்ட டெலஸ்கோப்பில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, ‘ஜேம்ஸ் வெப்’ என்ற புதிய டெலஸ்கோப்பை விண்வெளியில் நாசா நிறுவி உள்ளது. கடந்த டிசம்பரில் அனுப்பப்பட்ட இந்த டெலஸ்கோப்பின் பாகங்கள் பொருத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
பூமியில் இருந்து, 16 லட்சம் கி.மீ., உயரத்தில் விண்வெளியில் நிறுவப்பட்டுள்ள இந்த புதிய டெலஸ்கோப், ஹப்பிள் டெலஸ்கோப்பைவிட பல மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. பல லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள பிரமாண்ட நட்சத்திரங்கள் உள்ளிட்டவை தொடர்பான தகவல்களை திரட்டும் சக்தி உடையது.நாசாவின் புதிய டெலஸ்கோப்பில் தங்கக் கண்ணாடி உள்ளது. அதன் அகலம் 21.32 அடி. பெரிலியத்தால் செய்யப்பட்ட 18 அறுகோண துண்டுகளை இணைத்து இந்த கண்ணாடி தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு துண்டிலும் 48.2 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு பிரதிபலிப்பானாக செயல்படுகிறது. இந்த ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப், ஒன்றரை மாத நடவடிக்கைகளுக்குப் பின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அது ஒரு தொலைதுார நட்சத்திரத்தின் ஒளியை படம் பிடித்து அனுப்பியுள்ளது. மேலும், செல்பி எனப்படும் தன்னைத் தானே படம் எடுத்தும் அனுப்பி வைத்துஉள்ளது.
Advertisement