சரண்யா மோகனிடம் சிம்பு பரத நாட்டியம் கற்றுக்கொண்டது எப்படி
சில நாட்களுக்கு முன் நடிகர் சிம்பு தனது எடைக்குறைப்பு பயண வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். உடற்பயிற்சி, யோகா, நடனம் என பல பயிற்சிகளை மேற்கொண்டு 105 கிலோ இருந்த தனது உடல் எடையை 72 கிலோவாக குறைதுள்ளார் சிம்பு. இதற்காக 2020ல் லாக்டவுன் சமயத்தில் கேரளா சென்ற சிம்பு, பயிற்சியின் ஒரு பகுதியாக பரதநாட்டியத்தையும் கற்றுகொண்டு வந்துள்ளார். சிம்புவுக்கு குருவாக இருந்து இதை கற்றுக்கொடுத்தவர் நடிகை சரண்யா மோகன். யாரடி நீ மோகினி, வேலாயுதம் படங்களில் தங்கையாக நடித்தாரே அவரே தான். சிம்புவுடனும் ஒஸ்தி என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
கேரளாவில் உள்ள பல் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் சரண்யா மோகன். எடைக்குறைப்புக்காக கேரளாவிற்கு சென்ற சிம்புவுக்கு ஒருமுறை சிகிச்சை அளிப்பதற்காக அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சரண்யாவின் கணவர் சென்றிருந்தார். அதன்பின் ஒருமுறை அவரது கிளினிக்கிற்கு சிம்பு வந்தபோது, அங்கே தனது கணவரை பார்ப்பதற்காக சரண்யாவும் வந்துள்ளார். அங்கே அவரை பார்த்து ஆச்சர்யப்பட்டு போன சிம்பு, பேச்சுவாக்கில் பரதநாட்டியம் கற்றுத்தர யாரையாவது சிபாரிசு செய்யுமாறும் கேட்டுள்ளார்.. ஆனால் கேரளாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்த சமயத்தில் தோதான நபர்கள் கிடைக்கவில்லை.
அதனால் தானே குருவாக மாறி களத்தில் இறங்கி விட்டார் சரண்யா மோகன்.. தினசரி ஒருமணி நேர பயிற்சி என கிட்டத்தட்ட இரண்டு வாரம் சிம்புவுக்கு பரதநாட்டிய பயிற்சி அளித்துள்ளார்.. சிம்புவுக்கு நடனம் எளிதான விஷயம் என்பதால் பரதநாட்டியத்தின் ஒவ்வொரு படியையும் விரைவிலேயே கற்றுக்கொண்டாராம். அதன்பிறகு சில நாட்கள் கழித்து, சரண்யா மோகன் வீட்டிற்கு துணிகள், இனிப்பு மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் என நிறைய பரிசுப்பொருட்களை தனது தரப்பு நபர்கள் மூலம் அனுப்பி வைத்தாராம் சிம்பு..