பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று 97 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர்ஜயன்ட்ஸ் என புதிதாக இரு அணிகள் இணைந்திருக்கும் நிலையில், மொத்தம் 10 அணிகள் ஏலத்தில் இருந்தன. அவற்றை ஏலத்தில் எடுப்பதற்காக மொத்தமாக 590 வீரர்கள் களம் கண்டனர். அவர்களில் 227 பேர் வெளிநாட்டு வீரர்கள். அனைத்து அணி உரிமையாளர்களும் பங்கேற்று வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர்.அவர்களில் அதிகம் கவனிக்கப்படுபவர், பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளரான பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா. தற்போது அவர் வெளிநாட்டில் இருக்கிறார். இந்த நிலையில், ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘குழந்தை களை விட்டுவிட்டு என்னால் இந்தியாவுக்கு வர முடியாது. எனவே, பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை. கடந்த சில நாட்களாக ஏலம் குறித்தும், வீரர்கள் தேர்வு குறித்தும் எனது அணியிடம் நிறைய ஆலோசனைகள் நடத்தியுள்ளேன். வீரர்கள் தேர்வு குறித்து உங்களின் (ரசிகர்களின்) பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் ஏலத்தில் பிரீத்தி ஜிந்தா பங்கேற்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.