உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என கூறப்படும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
அமெரிக்க வெள்ளைமாளிகையின் கோரிக்கையை ஏற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொலைபேசி உரையாடலுக்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் முதல் முறையாக இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
மேலும், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் சாத்தியம் அதிகரித்து வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதன் அடுத்த நாள், அதுவும் உக்ரைனில் இருந்து அமெரிக்க துருப்புகளை வெளியேற்றிய சில மணி நேரங்களுக்கு பின்னர், புடினுடன் ஜோ பைடன் சுமார் ஒருமணி நேரம் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இரு தலைவர்களும் என்ன விவாதித்தார்கள் என்பது தொடர்பில் வெள்ளைமாளிகையும் ரஷ்ய ஜனாதிபதி மாளிகையும் இதுவரை தகவல் ஏதும் வெளியிடவில்லை.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கவிருப்பதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் மட்டுமே கூறி வருவதாகவும், இந்த மோதல் போக்கு அவர்களின் தேவையாக இருக்கிறது எனவும் ரஷ்யா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
மட்டுமின்றி, ரஷ்யா படையெடுக்க இருப்பது தொடர்பில் நாள் குறித்ததாக கூறும் அமெரிக்கா, தகுந்த ஆதாரங்களை வெளியிட வேண்டும் எனவும், அல்லது இது பொய்யான தகவல் என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ரஷ்யா கோரியுள்ளது.
ரஷ்யா தொடர்பில் தங்களிடன் உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் குறிப்பிட்டுள்ளதற்கு ரஷ்யா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.