40 வருடங்களாக ஒதுங்கி இருந்த தயாரிப்பு நிறுவனத்தை மீட்டெடுத்த இயக்குனர் சகோதரர்கள்
சமீபத்தில் மலையாளத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் வெளியான ஹிருதயம் படம் 20 நாட்களை கடந்து தற்போதும் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படத்தின் வெற்றி மற்றும் வசூலால் மகிழ்ச்சியில் இருக்கிறது படத்தை தயாரித்த மேரிலேண்ட் ஸ்டுடியோ நிறுவனம். இந்தப்படத்தை தயாரித்துள்ள விசாக் சுப்பிரமணியன் என்பவர் பழம்பெரும் தயாரிப்பாளர் பி.சுப்பிரமணியம் என்பவரின் பேரன் ஆவார்..
மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மேரிலேண்ட் ஸ்டுடியோ நிறுவனத்தை துவங்கி கிட்டத்தட்ட 69 படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளரும் இயக்குனருமான பி.சுப்பிரமணியம்.. 1979-ல் அவரது மரணத்திற்கு பிறகு அவரது மகன்கள் திரைப்படங்கள் தயாரிப்பதை விட்டுவிட்டு, சில காலம் கழித்து சின்னத்திரை பக்கம் பக்தி தொடர்கள் தயாரிக்க சென்றுவிட்டனர்.
இந்தநிலையில் அவர்கள் குடும்பத்தில் மூன்றாம் தலைமுறை வாரிசான விசாக் சுப்பிரமணியம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் நயன்தாரா, நிவின்பாலி இணைந்து நடித்த லவ் ஆக்சன் ட்ராமா என்கிற படம் மூலம் மீண்டும் தயாரிப்பில் இறங்கினார். அதேசமயம் நீண்ட நாட்கள் கழித்து பட தயாரிப்புக்கு வருவதால் இந்த படத்தை மேரிலேன்ட் ஸ்டுடியோ மூலம் தயாரிக்காமல், புதிய நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து காமெடி நடிகர் அஜு வர்கீஸுடன் இணைந்து தயாரித்தார் விசாக் சுப்பிரமணியன்.
அந்தப்படத்தின் வெற்றி கொடுத்த நம்பிக்கையில் தைரியமான விசாக் சுப்ரமணியன், அடுத்த படத்தை நேரடியாக மேரிலேன்ட் ஸ்டுடியோ மூலம் தயாரிப்பது என முடிவெடுத்தார். அதேசமயம் அந்தப்படத்தை வினீத் சீனிவாசன்-பிரணவ் மோகன்லால் கூட்டணியில் தான் உருவாக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்துள்ளார். இப்போது நினைத்தபடி சாதித்து அந்தப்படத்தின் மூலம் லாபமும் பார்க்க ஆரம்பித்து விட்டார். அந்தவகையில் வினீத்-தயன் சீனிவாசன் சகோதரர்கள் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்தை மீட்டெடுத்து வந்துள்ளனர் என்றே சொல்லலாம்.