டேராடூன்: ‘இந்தியாவை ஒரு நாடாகவே காங்கிரஸ் கருதவில்லை. ,’ என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. கடைசி கட்ட ஓட்டு வேட்டைக்காக பாஜ வேட்பாளர்களை ஆதரித்து, இம்மாநிலத்தின் ருத்ராபூரில் நேற்று பிரசாரம் செய்தபோது பிரதமர் மோடி பேசியதாவது: பெரும்பான்மையான மாநிலங்களில் நிராகரிக்கப்பட்ட காங்கிரசை அழிக்கும் வாய்ப்பாக இந்த தேர்தலை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேவபூமியில் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை நிறுவ திட்டமிட்டுள்ள காங்கிரசின் திட்டத்தையும், எல்லாவற்றிலும் சமரசமக போகும் அக்கட்சியையும் உத்தரகாண்ட் மக்கள் ஏற்கக் கூடாது. நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் பற்றி எந்த புரிதலும் காங்கிரசுக்கு இல்லை. ராணுவத்தையும் அவமரியாதை செய்கிறது. முப்படைகளின் தலைமை தளபதியான ஜெனரல் பிபின் ராவத்தை தெருவோர போக்கிரி என்று கூறியதற்காக தேர்தலில் மக்கள் அதை பழிதீர்க்க வேண்டும். இந்தியாவை காங்கிரஸ் ஒரு ஒருங்கிணைந்த தேசமாக கூட பார்க்கவில்லை. இந்தியா ஒருங்கிணைந்த தேசமாக இல்லாவிட்டால், உத்தரகாண்ட் மலைகளின் துணிச்சலான மகன்கள், கேரள கடற்கரையில் நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாத்திருக்க மாட்டார்கள். கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் மனித குலத்தை கொரோனா தாக்கி வருகிறது. இந்த நெருக்கடியான நேரத்திலும், பாஜ அரசு வளர்ச்சிப் பணிகளைத் தடையின்றி மேற்கொண்டது. ஏழைகளுக்கு முழு மனதுடன் சேவை செய்தது. உத்தரகாண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்கான எந்த வாய்ப்புகளையும் பாஜ விட்டு வைக்கவில்லை. இவ்வாறு மோடி பேசினார். கோவா விடுதலை தொடர்பாக நேற்று முன்தினம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரரும், நாட்டின் வரலாறு பற்றி மோடிக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று குற்றம்சாட்டினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே, ‘காங்கிரசுக்கு எதுவும் தெரியவில்லை’ என்று மோடி பேசியுள்ளார்.