பெங்களூரு:
15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புதிதாக இணைந்துள்ளன.
இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று பெங்களூருவில் தொடங்கியது. முதல் நாள் மெகா ஏலத்தில் 161 வீரா்களின் பெயர்கள் இடம் பெற்றன.
வெளிநாட்டு வீரர்களை வாங்குவதில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இரண்டாம் நாளாக இன்று காலை மீண்டும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனிடையே, சில முக்கியமான நட்சத்திர வீரர்களை அடிப்படை விலைக்கு கூட எந்த அணியினரும் எடுக்க முன் வரவில்லை.
சென்னை அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னாவை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. அதேபோல ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை.
இந்திய அணியின் வேகப்பந்து வேச்சாளர் உமேஷ் யாதவ், விக்கெட் கீப்பர் விருத்திமான் சாகா மற்றும் தென் ஆப்பிரிகாவின் அதிரடி வீரர் டேவிட் மில்லர், சுழற் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், ஆஸ்திரேலியாவின் மேத்தீவ் வேட், ஆடம் ஜாம்பா, இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸ், வங்காளதேசத்தை சேர்ந்த ஷகிப் அல் ஹசன், மற்றும் ஆப்கானிஸ்தானின் முகம்மது நபி போன்ற நட்சத்திர ஆட்டக்காரர்களை ஏலத்தில் எடுக்க நேற்று எந்த அணியும் முன் வரவில்லை.
முதல் நாள் ஏலத்தில் நட்சத்திர வீரர்களை புறக்கணித்த ஐ.பி.எல் அணி நிர்வாகங்களால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையும் படியுங்கள்…
அதிக விலைக்கு ஏலம் போன முன்னணி வெளிநாட்டு வீரர்கள்