புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் குற்றப் பின்னணி கொண்ட எம்எல்ஏ முக்தார் அன்சாரி மீண்டும் மாவ் தொகுதியில் போட்டியிடுகிறார்.
உ.பி,யின் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதியாக இருப்பவர் முக்தார் அன்சாரி. இவர் மீது ஆள் கடத்தல், பாஜக எம்எல்ஏ கொலை உள்ளிட்ட சுமார் 30 வழக்குகள் உ.பி. மற்றும் பஞ்சாபில் நடைபெற்று வருகின்றன. கடந்த 2019-ல் ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு பஞ்சாப் ரூப்நாகர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின், உ.பி.யில் பதிவான வழக்குகளில் அவரிடம் விசாரணை நடத்த முதல்வர் ஆதித்யநாத் அரசு நீதிமன்றத்தில் முறையிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி முக்தார் அன்சாரி, உ.பி. பாந்தா சிறைக்கு மாற்றப்பட்டார்.
முஸ்லிம்கள் அதிகமுள்ள மாவ் தொகுதியில், அன்சாரி 1996 முதல் தொடர்ந்து எம்எல்ஏ.வாக இருக்கிறார். இங்கு முதல் முறை மாயாவதியின் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்டார். அடுத்த தேர்தலில் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி, 2002 மற்றும் 2007-ல் சுயேச்சை எம்எல்ஏவானார். பிறகு கவுமி ஏக்தா தளம் என்ற புதிய கட்சியை 2010-ல் உருவாக்கி 2012 தேர்தலில் எம்எல்ஏவானார். மீண்டும் தம் கட்சியை பகுஜன் கட்சியுடன் இணைத்து 2017 சட்டப்பேரவை தேர்தலில் மாவ் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ.வானார்.
இந்த தேர்தலில் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு வாய்ப்பளிக்கப் போவதில்லை என மாயாவதி அறிவித்தார். அதனால், 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்ட சுஹல்தேவ், பாரதிய சமாஜ் கட்சியில் (எஸ்பிஎஸ்பி) இந்த முறை போட்டியிடுகிறார்.
இந்நிலையில், சமாஜ்வாதிகூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற்படுத் தப்பட்டவர்கள் ஆதரவுக் கட்சி எஸ்பிஎஸ்பி, மாவ் தொகுதி அமைந்துள்ள கிழக்கு உ.பி.யில் செல்வாக்குடன் உள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், அன்சாரிக்கு வாய்ப்பளித்துள்ளார். இதை யடுத்து சிறையில் இருந்தபடியே அவர் இந்த தேர்தலில் போட்டி யிடுகிறார்.
பாஜக ஆட்சியில் அன்சாரி மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சட்டவிரோதமாக சம்பாதித்ததாக அன்சாரியின் பல கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரதுஓட்டல் உள்ளிட்ட சில கட்டிடங்கள் அரசு அனுமதியின்றி கட்டப்பட்டதாக இடிக்கப்பட்டது.
இதன்மூலம், அன்சாரிக்கு மொத்தம் ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டது. அன்சாரியை போல்வேறு சில குற்றப் பின்னணி கொண்டவர்களின் கட்டிடங்களும் இடிக்கப்பட்டதால் ‘புல்டோசர் பாபா’ என்று முதல்வர் ஆதித்யநாத்தை உ.பி. மக்கள் அழைக்கின்றனர்.
பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசிக்கு அருகிலுள்ள மாவ், கடைசியாக 7-வது கட்டத்தில் தேர்தலை சந்திக்கிறது. இதன் முடிவுகள் மார்ச் 10-ல் வெளியாகின்றன.