காபூல்-அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் பலியானோரின் குடும்பத்திற்கு, ஆப்கனுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் ஒதுக்கப்பட்டதை கண்டித்து, காபூலில் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர்.
கடந்த 2001 செப்., 11ல், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரம், தெற்காசிய நாடான ஆப்கனில் தலைமறைவாக இருந்த பயங்கரவாதி பின்லேடன் உத்தரவில் தகர்க்கப்பட்டது. இதையடுத்து, ஆப்கனுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியது.இந்நிலையில், முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து, இரட்டை கோபுர தாக்குதலில் பலியானோரின் குடும்பத்திற்கு, 26 ஆயிரத்து 250 கோடி ரூபாய் வழங்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் ஆப்கன் மக்களின் பணத்தை, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் பலியானோரின் குடும்பத்திற்கு வழங்குவதற்கு உலகளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள பெரிய மசூதியில் ஏராளமானோர் கூடி அமெரிக்காவிற்கு எதிராக முழக்கமிட்டனர்.’இரட்டை கோபுர தாக்குதலுக்கு, அல்-குவைதா அமைப்புதான் காரணமே தவிர, தலிபான்கள் காரணமல்ல. எனவே ஆப்கன் மக்களின் பணத்தை இழப்பீடாக வழங்குவது அநியாயம்’ என, சமூக ஊடகங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
Advertisement