நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்திரா கடந்த 2015-ம் ஆண்டு ஆட்டோமொபைல் ஏஜென்சி உரிமையாளர் பர்ஹத் அம்ரா என்பவரிடம் ரூ.21 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அந்தக் கடனை 2017-ம் ஆண்டு 18 சதவிகித வட்டியுடன் திரும்ப கொடுப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது ஷில்பா ஷெட்டியின் தந்தை இறந்துவிட்டார். இதனால் கடன் திரும்ப கொடுக்கப்படாமல் இருக்கிறது. கடன் தொடுத்த தொழிலதிபர் கடனை திரும்ப கொடுக்கும்படி ஷில்பா ஷெட்டி மற்றும் அவர் தாயாரிடம் கேட்டார். ஆனால், அவர்கள் கொடுக்க முன் வரவில்லை. இதையடுத்து அந்தத் தொழிலதிபர் ஷில்பா ஷெட்டி, அவர் தாயார் சுனந்தா மற்றும் சகோதரி சமிந்தா ஷெட்டி ஆகியோர் மீது மும்பை ஜுகு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பான வழக்கு அந்தேரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தொழிலதிபர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஷில்பா ஷெட்டி தன் தந்தை வாங்கிய கடனை திரும்ப செலுத்த மறுக்கிறார் என்று வாதிட்டார். ஷில்பா ஷெட்டி, அவர் சகோதரி சமிந்தா, தாயார் சுனந்தா ஆகியோர் தங்கள் தந்தை வாங்கிய கடனை தங்களால் திரும்ப கொடுக்க முடியாது என்று கூறுகின்றனர் என்று தெரிவித்தார். இதையடுத்து வரும் 28-ம் தேதி ஷில்பா ஷெட்டி, சகோதரி சமிந்தா ஷெட்டி, தாயார் சுனந்தா ஷெட்டி ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். ஷில்பா ஷெட்டி மீது ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், புதிதாக இந்த வழக்கும் சேர்ந்துள்ளது. ஷில்பா ஷெட்டியின் கணவர் மீதும் ஆபாச வீடியோ தயாரித்து மொபைல் செயலி மூலம் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: ₹38.5 கோடி மதிப்புள்ள சொத்துகள்; ஷில்பா ஷெட்டி பெயருக்கு மாற்றிய கணவர் ராஜ் குந்த்ரா!