மூணாறு: இடுக்கி மாவட்ட போலீஸ் மோப்ப நாய் பிரிவில் பயிற்சி பெற்ற பெல்ஜியம் மெலானாய்டு வகை நாய் சேர்க்கப்பட்டது. மாவட்டத்தில் மோப்ப நாய் பிரிவில் திருட்டு, கொலை குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை எளிதில் கண்டறிய வசதியாக ஏழு மோப்ப நாய்கள் உள்ளன.
தற்போது பெல்ஜியம் மெலானாய்டு வகையைச் சேர்ந்த ஏஞ்சல் என பெயரிடப்பட்ட நாய் சேர்க்கப்பட்டதால் மோப்ப நாய்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தது.இந்த நாயுடன் 23 நாய்களுக்கு திருச்சூர் போலீஸ் அகாடமியில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒன்பது மாத பயிற்சிக்கு பிறகு ஏஞ்சல் மோப்ப நாய் பிரிவில் இடம் பிடித்தது. போதை பொருள் தடுப்பு துறை டி.எஸ்.பி. லால் பொறுப்பு வகிக்கும் மோப்பநாய் பிரிவில் எஸ்.ஐ. ரோய் தாமஸ் தலைமையில் பணிகள் நடக்கிறது. அவர்கள் மோப்ப நாய் ஏஞ்சலை இடுக்கி எஸ்.பி. கருப்பசாமி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் 2020 ஆக.6ல் கடுமையாக நிலச்சரிவு ஏற்பட்டு 70 பேர் இறந்தனர்.அப்போது திருச்சூர் போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வந்த பெல்ஜியம் மெலானாய்டு வகையைச் சேர்ந்த மாயா, லாப்ரடோர் வகையைச் சேர்ந்த டோனா ஆகிய மோப்பநாய்கள் மண்ணிற்குள் புதைந்த பலரது உடல்களை கண்டு பிடிக்க பெரிதும் உதவியது. அதனால் இடுக்கி மோப்ப நாய் பிரிவுக்கு பெல்ஜியம் மெலானாய்டு வகையை தேர்வு செய்து பயிற்சி அளித்து கொண்டு வரப்பட்டது குறிப்பிடதக்கது.
Advertisement