புதுடெல்லி: இந்தியாவில் சமீப காலமாக டிரோன்களின் பயன்பாடு அதிகமாகி இருக்கிறது. காஷ்மீரில் கடந்தாண்டு விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் டிரோன்கள் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, டிரோன்களின் பயன்பாட்டுக்கு ஒன்றிய அரசு கடும் கட்டுப்பாடுகள் விதித்தது. தற்போது, டிரோன்களின் பயன்பாடு, உள்நாட்டு தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு பல்வேறு சலுகைகளையும், கட்டுப்பாடு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் 2 கிலோ எடையுள்ள டிரோன்களை இயக்குவதற்கு ரிமோட் பைலட் சான்றிதழ் தேவையில்லை என்று ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.