மத்திய பாகிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் பக்கங்களை எரித்ததாகக் கூறி கும்பல் ஒன்று ஒருவரை அடித்தேக் கொன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கானேவால் மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த கொலை தொடர்பாக 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபர், கும்பல் ஒன்றால் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னரே, அந்த நபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த நபரின் சடலம் குடும்பத்தாரிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவிக்கையில், இந்த வழக்கு சட்டத்திற்கு உட்பட்டு முழு தீவிரத்துடன் கையாளப்படும் என்று கூறியதுடன்,
அந்த நபரைக் காப்பாற்ற தங்கள் கடமையில் தவறியதாக குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் குறித்து அறிக்கையும் கோரியுள்ளார்.
லாகூரில் இருந்து தென்மேற்கே 275கிமீ தொலைவில் அமைந்துள்ள கானேவால் பகுதியிலேயே குறித்த கும்பல் கொலை நடந்துள்ளது.
40 வயது கடந்த அந்த நபரை கும்பல் ஒன்று, மரத்தில் கட்டிவைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
மட்டுமின்றி அவரது உடலை மரத்தில் கட்டித் தூக்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உளவியல் பாதிப்பு கொண்ட நபரையே அந்த கும்பல் கடத்திச் சென்று கொன்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சுமார் 2 மாதங்களுக்கு முன்னர், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் நகரில் மதத்திற்கு எதிராக கருத்து கூறியதாக கூறி இலங்கையர் ஒருவரை கும்பல் ஒன்று அடித்துக் கொன்றதுடன், தீயிட்டும் குளுத்தியது.
இச்சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே இராஜாங்க ரீதியாக கசப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.